சென்னை, ஏப். 15–
தமிழகத்தில் 2 மாத மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்தது. மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கில், இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 14-ம் தேதி (நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஜூன் 14–ந் தேதி வரை 61 நாட்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக மீன்வளத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைக் காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
மீன் விலை உயரும்
மேலும், இந்த 61 நாட்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர். மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தவுடன் தமிழகத்தில் மீன்களின் விலையும் உயரத் தொடங்கும். அதேநேரம், பாரம்பரிய மீன்பிடிப் படகுகளான பாய்மரப் படகு, நாட்டுப் படகு மற்றும் கட்டுமரங்கள் வழக்கம்போல கடலுக்குச் செல்லும். இதுவரை தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை தமிழகத்தில் 1.90 லட்சம் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.