சென்னை, மே.23-
சென்னையில் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று தொடங்க இருந்த மணல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக சம்மேளன தலைவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 1½ ஆண்டுகளாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் திறக்க வேண்டும். லாரிகளில் அதிகபாரம் ஏற்றுவதை தடுக்க வேண்டும். எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தோம்.
இதற்கிடையே சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி சென்னையில், கிரசர் உரிமையாளர்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் மணல் குவாரிகளை விரைந்து திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும், லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றுவது தடுக்கப்படும், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை ஏற்றியது தொடர்பாக கிரசர் உரிமையாளர்களுடன் பேசி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
அமைச்சருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, நாங்கள் ஏற்கனவே அறிவித்து இருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். இதேபோல் கிரஷர் உரிமையாளர்கள் லாரிகளில் அதிக பாரம் ஏற்ற நிர்பந்தம் செய்வது குறித்தும், அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.