செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 1.58 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, பிப்.4–

தமிழகத்தில் 465 மையங்களில்

இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 314 ஆண்கள், 200 பெண்கள் என மொத்தம் 514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 145 பேரும், கோவையில் 74 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், தஞ்சாவூரில் 30 பேரும், செங்கல்பட்டில் 25 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தருமபுரி, பெரம்பலூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, ராமநாதபுரத்தில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 866 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 588 ஆண்களும், 3 லட்சத்து 32 ஆயிரத்து 244 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 400 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 647 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 4 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12 ஆயிரத்து 371 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 533 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 23 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 494 பேர் உள்ளனர். மேலும் அரியலூர், செங்கல்பட்டு, விருதுநகர், விழுப்புரம் உள்பட 20 மாவட்டங்களில் நேற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 58 லட்சத்து 65 ஆயிரத்து 23 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்து 471 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

465 மையங்களில் தடுப்பூசி

தமிழகத்தில் நேற்று 465 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 46 ஆயிரத்து 500 சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பு மருந்து தயாராக வைக்கப்பட்டிருந்தது. இதில் 10 ஆயிரத்து 313 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 163 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 10 ஆயிரத்து 476 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 998 பேருக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியும், 2 ஆயிரத்து 945 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி என ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *