சென்னை, அக்.3-
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழாவில் நேற்று பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
நிலையான மற்றும் அமைதியான உலகை வளர்ப்பதற்கு, காந்தியின் காலத்தால் அழியாத கொள்கைகள் இன்று மிகவும் முக்கியமானவை. கடைசி மனிதனை நாம் உயர்த்தாதவரை, காந்தியின் நோக்கம் நிறைவேறாது.
தமிழ்நாட்டில் சமூகநீதி என்ற சத்தம் பரவலாக இருந்தாலும், நமது ஆதிதிராவிட சகோதர-–சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கொடூரமானது.
தமிழ்நாட்டில். கடந்த 3 ஆண்டுகளில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பக பதிவேட்டின் தகவலின்படி பட்டியல் சாதியினர் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் தேசிய சராசரியில் பாதியாக இருக்கிறது.
மனிதாபிமானமற்ற முறையில் கழிவுகளை அகற்றும் பழக்கத்தால் எண்ணற்ற அப்பாவி உயிர்கள் பலியாவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நாம் துக்கம் அனுசரிக்கிறோம்.
மது மாபியா கும்பல்களின் முதன்மையான இலக்காக ஆதி திராவிடர்கள்தான் இருக்கின்றனர். அதற்கு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மரணங்களே சாட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.