சென்னை, மே.4-
தமிழகத்தில் அரசு வேலைக்காக 54 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். அதில் 60 வயதிற்கு மேல் 7 ஆயிரம் பேர் உள்ளனர்.
கடந்த காலங்களில் அரசின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே நிரப்பப்பட்டு வந்தது. ஒருவர் படித்து முடித்தவுடன் தனது கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விடுவார். அரசு வேலை நிரப்பப்படும்போது, கல்வித்தகுதி வாரியாக பதிவு செய்யப்பட்டவங்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அதில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் இப்போது பெரும்பாலான வேலைகள், தேர்வின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில பணியிடங்கள் இன்னும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே இப்போதும் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி நிலவரப்படி மொத்தம் 54 லட்சத்து 25 ஆயிரத்து 114 பேர் வேலைக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். அதில் 60 வயதிற்கு மேல் 7 ஆயிரம் பேர் உள்ளனர். மேலும், ஆண்கள் 25 லட்சத்து 134. பெண்கள் 29 லட்சத்து 24 ஆயிரத்து 695. திருநங்கைகள் 285 பேர். அதில் மாற்றுத்திறனாளிகள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 647 பேரும் அடங்குவர்.
அதில் இடைநிலை ஆசிரியர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 572 பேரும், டிப்ளமோ படித்தவர்கள் 2 லட்சத்து 67 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 91 ஆயிரம் பேரும், என்ஜினீயரிங் படித்தவர்கள் 2 லட்சத்து 45 ஆயிரம் பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 14 ஆயிரம் பேரும், முதுகலை பொறியியல் படித்தவர்கள் 2 லட்சத்து 14 ஆயிரம் பேரும் ஆகும்.