செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்: தியேட்டர், மால்களில் கூட்டம் குறைந்தது

சென்னை, ஏப்.11–-

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் சென்னையில் தியேட்டர்கள், மால்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வீச தொடங்கி உள்ளது. அதன் பாதிப்பு தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது.

அதன்படி தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மால்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அரசின் உத்தரவை ஏற்று தியேட்டர்களில் இருக்கை எண்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மால்களில் அரசு உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து ஆய்வு செய்தனர்.

அப்போது முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அலட்சியமாக இருந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அபராத நடவடிக்கைக்கு பயந்து பலரும் முகக்கவசம் அணிந்து வந்திருந்ததையும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்ததையும் காண முடிந்தது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் காரணமாக தியேட்டர்கள், மால்களில் வழக்கமான கூட்டம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *