புதுடில்லி, டிச. 11–
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12 முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 11, 12, 13, 16,17 ஆகிய 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 13, 16, 17ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த 3 நாட்களும் கன மழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.