அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூன் 28-–
விளையாட்டுக்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற உயரிய விருதுகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறைகளின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த முறை ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிபெற்ற 12 தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள வீரர்களுக்கு ஊக்கத் தொகையை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இதுவரை 16 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், விளையாட்டு உபகரணங்களை வாங்கவும் நிதி உதவி தேவைப்பட்டால், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை யின் www.tnchampions.sdat.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 375 விளையாட்டு வீரர்களுக்கு, இதுவரை ரூ.8.62 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை தேசிய மற்றும் சர்வதேச அளவிலானப் போட்டிகளில் 21 தங்கம் உள்பட 62 பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண தொகுப்பு வழங்கும் திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். 33 விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட இந்த தொகுப்பை, இதுவரை மதுரை, கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரத்து 72 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கி யுள்ளோம். மீதமுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அந்த தொகுப்பு விரைவில் வழங்கப்படும்.
சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் 12 நாட்கள் நடத்தப்பட்ட கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் தொடக்க போட்டியில் கலந்துகொண்ட பிரதமர், இவ்வளவு சிறப்பான ஒரு கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சியை நான் எங்குமே பார்த்ததில்லை என்று குறிப்பிட்டு பாராட்டினார். இந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு கடந்த ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்திற்கு கொடுத்த நிதி ரூ.25 கோடி. இந்தமுறை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்த நிதி வெறும் ரூ.10 கோடி.
புதிய விளையாட்டுகள்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அதில் 3 லட்சத்து 76 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் கலந்து கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு புதிய விளையாட்டுகள் இந்த ஆண்டு சேர்க்கப்படும்.
சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ்–-2023 சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம், தமிழ்நாடு செஸ் வீரர் குகேஷ், கனடாவில் நடைபெற்ற பிடே (எப்.ஐ.டி.இ.) போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியைப் பெற்றார். அவர் தற்போது பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். உலகிலேயே மிக இளம் வயதில் அந்த போட்டியில் பங்கேற்கவுள்ள குகேஷ், தமிழ்நாடு அரசின் எலைட் திட்ட வீரர்
கடந்த ஆண்டில் மட்டும் 7 விளையாட்டு வீரர்கள் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
9 சட்டமன்றத் தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
மினி ஸ்டேடியம் அமைக்கப்படாத சட்டமன்றத் தொகுதிகளில், மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து அதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். சேலம் மேற்கு தொகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் பன்முக விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளுக்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
மணிப்பூர் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட 20 மணிப்பூர் விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்ததன் பேரில், அவர்கள் இங்கு வாள்வீச்சு மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளுக்கான பயிற்சி பெற்றனர். அவர்களுக்கான விமானப் பயணக் கட்டணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமே ஏற்றது. தமிழ்நாட்டில் பயிற்சிபெற்ற அந்த மணிப்பூர் வீரர்களில் இரண்டு பேர், கேலோ இந்தியா இளையோர் போட்டியில் 2 பதக்கங்களைக் வென்றனர். திராவிட மாடல் என்றால் என்னவென்று கேட்கும் சிலருக்கு இதுதான் பதில். சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிக்கு இணங்க இந்தாண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும். விளையாட்டுக்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற உயரிய விருதுகள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த விருது ஒடிசா மாநிலத்துக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.