நாடும் நடப்பும்

தமிழகத்திற்கு ரூ.1201 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு தர மத்திய அரசு முடிவு


ஆர். முத்துக்குமார்


கொரோனா கால செலவீனங்கள், பல மாநில அரசுகளின் கஜானாவிற்கு பெரும் சவாலாக இருப்பதை அறிவோம். நாடெங்கும் ‘ஒரே தேசம் ஒரே வரி’ என்ற செயல்திட்டம் அமுலுக்கு வந்த நாள் முதலாய் இந்த வரிகள் அப்படியே மத்திய தொகுப்புக்கு சென்று விடுமே. மாநில அரசுகளுக்கு உரிய பங்கை உரிய நேரத்தில் தராமல் சாக்கு போக்கு சொல்லி அத்தொகையை மத்திய அரசின் நட்பு மாநிலங்களுக்கு சாதகமாக செயல்பட்டால் அது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்குமே?

இந்தக் கேள்விக்கு பதிலாய் தமிழகமும் பல பொருளாதார சிக்கல்களில் பிடிபட்டு இருப்பதை பார்க்கும் போது தொழில்துறையில் நமது வெற்றி பயணம் தொடர்ந்தும் வளர்ந்த மாநிலமாக மாறுவதில் தாமதம் நீடிக்கிறதே?

இன்றைய கட்டத்தில் தமிழக திட்டங்களில் பெருவாரியான மத்திய அரசின் திட்டங்களே மாநிலம் எங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசின் பல்வேறு திட்டங்களோ சென்னை, கோவை ஆகிய பெரிய நகரங்களில் மட்டுமே சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருவது தெரிகிறது.

இந்நிலை மாற தமிழகத்தின் கஜானாவும் நிரம்பிட வழிவகை செய்யும் நோக்கத்துடன் சமீபத்தில் நிதி அமைசசர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49–வது கூட்டம் தமிழகத்திற்கு நிலுவையில் இருந்த ரூ.1201 கோடி கொடுப்பதாக அறிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு தற்போது (2022 ஜூன்) வரை வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை மொத்தமாக ரூ.16,982 கோடி வழங்கப்படும். இத்தொகை ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் உண்மையிலேயே இல்லை என்றாலும் மத்திய அரசு தனது சொந்தநிதியில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது. இனிமேல் வசூலிக்கப்படும் இழப்பீடு வரி வசூலிப்பில் இருந்து இத்தொகையை பெற்றுக் கொள்வோம். இத்தொகையுடன் ஜிஎஸ்டி சட்டத்தில் கூறப்பட்டது போல 5 ஆண்டுகளுக்கான இழப்பீடும் வழங்கப்பட்டு விடும்.

மேலும் வெல்லப் பாகுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது. ஆனால் வெல்லம் தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டாலோ, லேபிள் ஒட்டப்பட்டாலோ 5 சதவீத வரி விதிக்கப்படும். கன்டெய்னர்கள் எங்கு செல்கின்றன என்பதை அறிவதற்காக பொருத்தப்படும் கண்காணிப்பு கருவிகள், டேக்குகள், டேட்டா லாக்கர்களுக்கான 18 சதவீத வரியும் சில நிபந்தனைகளுடன் முற்றிலும் நீக்கப்படுகிறது.

பென்சில் சீவும் சாதனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.மேலும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கும் முடிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக்கொண்டது. இதன் வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்த 5 அல்லது 6 நாட்களில் அனுப்பி வைக்கப்படும். வழக்கமான ஜிஎஸ்டி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தால் அதற்கு விதிக்கப்படும் அபராதத்தை முறைப்படுத்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *