வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
விழுப்புரம், கடலூர், புதுச்சேரிக்கு மிக கனமழை எச்சரிக்கை
19–ந்தேதி வரை சென்னையில் கனமழை
சென்னை, பிப். 16–
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த இரு நாட்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையும், நாளை மறுநாளும் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை
17–ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
18–ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19–ந்தேதி வடதமிழகத்இல் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஓட்டிய மத்தியமேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் 18–ந்தேதி தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்துலும் வீசக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் ஊத்து – 3 செ.மீ., நாலுமுக்கு, காக்காச்சி தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாள்களில் நகரக் கூடும் என்றும், மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக தெற்கு வங்கக் கடலில் நிலவி வந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி நெருங்கி வர வர, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.