செய்திகள்

தமிழகத்தின் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஆக. 16–

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16–ந்தேதி (இன்று) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19 மற்றும் 20–ந்தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 16ந்தேதி வரையும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் 19–ந் தேதி வரையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.

மன்னார் வளைகுடா பகுதிகளில் வரும் 16, 17ந்தேதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், சின்கோனா, ஒரத்தநாடு பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *