போஸ்டர் செய்தி

தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடி உதயம்

Spread the love

சென்னை, ஜூன்.19-

சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த ஆவடியை அவசர சட்டம் மூலம் மாநகராட்சியாக தமிழக அரசு தரம் உயர்த்தியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடி உதயமாகி உள்ளது.

மக்கள் தொகை, மக்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப உருவாக்க வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இவற்றை கருத்தில் கொண்டு, ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் அதன்பின் தேவைக்கேற்ப மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை முன்னதாக சென்னை, மதுரை, கோவை உட்பட 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில், சமீபத்தில்தான் நாகர்கோவில், ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்த வகையில் தற்போது 14 மாநகராட்சிகள் உள்ளன.

இந்நிலையில், ஆவடி சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதலுடன் நேற்று முன்தினம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிதழில் இந்த அவசரச் சட்டம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

15–வது மாநகராட்சி

இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியான கவர்னரின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்பதால், அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. ஆவடி மாநகராட்சி அவசர சட்டம் 2019 உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆவடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகள் மட்டும் (48 வார்டுகள்) இந்த அவசர சட்டத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

எனவே ஆவடி மாநகராட்சிக்கு ஒரு மேயர் நியமிக்கப்பட வேண்டும். மாநகராட்சி கவுன்சில், நிலைக்குழு, வார்டு கமிட்டி, ஆணையர் ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும்.

இதற்கான தேர்தல்களை நடத்தும்போது ஏற்கனவே உள்ள ஒதுக்கீட்டின்படி பெண்கள், எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். அங்கு மக்கள் தொகை பெருகி வருவதாலும், ஆண்டு வருமானம் உயர்வதோடு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவாக இருப்பதாலும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அந்த முடிவின் அடிப்படையில் இதற்கான அவசர சட்டம் வெளியிடப்படுகிறது.

மேலும், இந்த மாநகராட்சியானது கோவை மாநகராட்சியின் சட்டதிட்டங்களின்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஆவடி நகராட்சியாக இருந்தபோது நிலுவையில் இருந்த வரிவசூல், வரி அமைப்பு உள்ளிட்ட அனைத்தும் அப்படியே மாநகராட்சியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நகராட்சியில் பணியாற்றிய அலுவலர்கள், அதிகாரிகள் ஆவடி மாநகராட்சியின் கீழ் அப்படியே பணியாற்றுவார்கள். ஆவடி மாநகராட்சிக்கென தனியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தல் நடந்து கவுன்சிலர்கள், மேயர் தேர்வு செய்யப்படும் வரை, தனி அதிகாரி நியமிக்கப்படுவார். புதிய மாநகராட்சி கவுன்சில் தேர்வு செய்யப்பட்டு, முதல் கவுன்சில் கூட்டம் நடக்கும் வரை தனி அதிகாரி பணியாற்றுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

இதுகுறித்து நிருபர்களுக்கு, ஆவடி எம்.எல்.ஏ.யும், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருமான பாண்டியராஜன் அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 3 வாக்குறுதிகள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.முதல் வாக்குறுதியான ரூ.300 கோடியில், 10 ஏக்கரில் ஒன்றரை லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்ததாக பருத்திப்பேட்டையில் பயோ பார்க் ரூ.32 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

3-வதாக ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆவடி நகராட்சி 5.2 லட்சம் மக்கள் தொகை கொண்டதாகும். இது பெரு நிறுவனங்கள் கொண்ட, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தற்போதுள்ள சூழலில் 48 வார்டுகள் அடங்கிய ஆவடி நகராட்சி மட்டுமே மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது. தற்போது தனித்துவமாக ஆவடி நகராட்சி மட்டும் அதற்கான தகுதி அடிப்படையில் மாநகராட்சியாக்கப் பட்டுள்ளது. தற்போது 15-வது மாநகராட்சியாக உள்ளது. மக்கள் தொகையில் 7-ம் இடம் வகிக்கிறது. வார்டு வரையறை பணிகள் நடந்து வருவதன் காரணமாக குழப்பம் ஏற்படும் என்பதால், ஆவடி மாநகராட்சியுடன் மற்ற பகுதிகள் இணைக்கப்படவில்லை. இது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஆவடி மக்களுக்கு தந்துள்ளது.

மாநகராட்சியாக தரம் உயருவதன் மூலம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், வளர்ச்சி திட்டங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் 2 கோடி ரூபாய் செலவில் ரெயில் நிலையம் மேம்படுத்தும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

டி.ஐ. சைக்கிள் உள்பட பல்வேறு தனியார் கம்பெனிகள், நிறுவனங்கள் உள்ளன. 15 ஏரிகள் இருக்கின்றன. சி.டி.எச். சாலை விரிவாக்கம், பாலங்களை அமைப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *