சென்னை, ஏப்.9–
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று (8–ந் தேதி) ஒரே நாளில் 20,125 மெகா வாட் மின்சாரம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் இருந்த மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கோடை காலம் துவங்கும் நேரத்தில் அதிகபடியான மின் நுகர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாளும் மின்தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் கடந்த 5ம் தேதி தமிழக மின்தேவை 19,580 மெகா வாட்டாக பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் அடுத்த 3 நாட்களில் அதாவது நேற்று இதுவரை இல்லாத வகையில் 20,125 மெகா வாட் மின்சாரம் பதிவாகியுள்ளது. இன்னும் ‘அக்னி நட்சத்திரம்’ ஆரம்பிக்காத நிலையில் இப்போதே இவ்வளவு மின்தேவை இருப்பதால், இனிவரும் நாட்களில் இது அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.