மார்ச் 18 பட்ஜெட்: எதிர்பார்ப்பில் தமிழகம்
ஆர். முத்துக்குமார்
சென்னை ஆண்டு தமிழக பட்ஜெட் தேர்தல் வர இருந்ததால் அடிப்படை நிதி ஆதாரங்களுக்காக முன்பே சமர்பிக்கப்பட்டு இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்று ஆட்சியில் அமர்ந்த சில நாட்களில் முழு பட்ஜெட்டை அவரது அமைச்சரவையில் இருக்கும் நிபுணர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சராக சமர்ப்பித்தார்.
அவர்களது இரண்டாவது பட்ஜெட் மார்ச் 18 சமர்பிக்க தயாராகிவிட்டது. அதில் தமிழகம் அடுத்த கட்ட வளர்ச்சிகளுக்கான திட்டங்கள் இருக்குமா? தமிழகமே ஆர்வத்துடன் காத்து இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த கொரோனா பெரும் தொற்று தன் பிடியை மெல்ல தளர்த்தி வருவதால் கல்வித்துறையும் உற்பத்தியாளர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி பழையபடி பணிகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.
சினிமாத் துறை, ஓட்டல்கள், சுற்றுலா பகுதிகள் எல்லாம் மிகப் பெரிய வீழ்ச்சியை கண்டது. சினிமா துறையில் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள், காட்சிகள் நடத்தாமல் இருந்தும், வாடகை மற்றும் குறைந்தபட்ச மின்சார கட்டணங்களை தர வேண்டிய கட்டாயத்தில் துவண்டுவிட்டனர்.
ஓடிடி தளங்களில் திரைப்படங்களை பார்த்த பலர் இனி தியேட்டரில் படம் பார்ப்பதில் உள்ள நெருக்கடிகளுக்கு பயந்து வீட்டிலேயே இருந்து பார்ப்பதையே விரும்ப ஆரம்பித்துவிட்டனர். இது புதிய பரிமாணம் ஆகும். இந்த காலக்கட்டத்தில் திரையரங்குகளுக்கு சென்றால் பயணச்செலவு, நேரச் செலவுகள், ரசனை மிக்க திரைப்படமா? போன்ற கேள்விகளுடன் யோசித்தவர் ஓ.டி.டி. தளத்தில் பார்த்தால் பிடிக்கவில்லை என்றால் அதை தொடர்ந்து பார்க்காமல் நிறுத்திக் கொள்ள வசதி இருப்பதும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்து மகிழும் வசதியும் அதன்மீதான விருப்பத்திற்கு அதிமுக்கிய காரணங்கள் ஆகும்.
கடற்கரை பகுதிகளிலும் மலைப் பிரதேச சுற்றுலா பயணிகள் விரும்பும் ரிசார்ட்டுகளுக்கும் பெரிய சிக்கலான நேரம் இது.
இரண்டாண்டு ஊரடங்கு காலத்தில் எந்த வருமானமும் கிடைக்காததுடன் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணத்தை செலுத்திட வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் அவர்களை நம்பி இருந்த ஊழியர்களின் பரிதாப நிலையை உணர்ந்து அரை மாத சம்பளத்தை கொடுத்தும் இருப்பார்கள்.
அப்படி நிதி நெருக்கடிகள் இனி வராது என்ற நம்பிக்கையுடன் செயல்படத் துவங்கும் நேரத்தில் சோதனையாய் உபயோகத்தில் இல்லாததால் அடிப்படை உபயோகப் பொருட்கள் எல்லாம் மீண்டும் உபயோகிக்க முடியாமல் போயிருக்கலாம்.
இனி வர இருக்கும் சுற்றுலாப்பயணிகளை கவர மீண்டும் பெரிய முதலீடுகள் செய்துதான் வண்ணமயமாய் காட்சி தர வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும்.
கல்வித் துறையின் முக்கிய அங்கமான ஆசிரியர்களுக்கு ஊரடங்கு நேரத்திலும் வீடியோ வகுப்புகள் எடுத்ததால் மாத வருமானம் வந்திருக்கும். ஆனால் வேலைப்பளுவோ முன்பை விட மூன்று மடங்கு அதிகமாகி விட்டதால் அவர்களின் மன நிலை பரிதாபமானதாக இருப்பதால் வர இருக்கும் விடுமுறைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள்.
இதில் தமிழக நிதி வரத்து சார்ந்த பல அம்சங்கள் பொதிந்து இருப்பதை அறிவோம். அதை மேலும் அதிகரிக்க என்ன யுக்திகளை கையாளப் போகிறார் நிதியமைச்சர் என்ற கேள்வியும் எழுகிறது.
தமிழகத்தின் வருவாயில் மிகப்பெரிய அங்கம் வகிக்கும் துறைகள் சாப்ட்வேர் துறை, ஏற்றுமதி துறைகள் ஆகும். அவை ஓரளவு ஊரடங்கு முடக்க காலத்திலும் இயங்க முடிந்ததால் அதிக நிதி பற்றாக்குறை விவகாரங்களில் தப்பித்து இருப்பார்கள்.
ஆனால் தமிழகம் சுற்றுலா பொருளாதாரம் ஆகும். அதிக விளம்பர செலவுகளே இன்றி கணிசமான வருவாயை தருகிறது.
உல்லாச சுற்றுலா, மருத்துவ சுற்றுலா கூடவே கல்வித்துறையும் பல மாநிலங்களில் இருந்து நம் மாநிலம் வந்து செலவு செய்ய வைப்பதால் வருவாய் ஈட்டிக் கொண்டிருக்கிறது.
ஆகவே புது சுற்றுலா பகுதிகளை உருவாக்கவும் தற்போதைய சுற்றுலா கட்டமைப்பு சீர் பெறவும் அரசு மானியங்கள் மற்றும் மின்சார செலவுகளுக்கு சலுகைகளும் தந்தால் நல்லது.
சுற்றுலாத்துறை எழுந்து நடை போட ஆரம்பித்தால் அது தமிழக அரசின் கஜானா நிறைய வழிவகுக்கும்!
சுற்றுலா துறையும் சினிமா துறையும் வர இருக்கும் புதிய பட்ஜெட்டில் சாதகமான திட்டங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதை உணர்ந்து என்ன அறிவிப்புகள் வரும் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மேலும் மந்த நிலையில் இருக்கும் கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு குறிப்பாக வீடு, நிலம் பதிவு முறைகள் மற்றும் கட்டணங்களில் சலுகைகள் வரலாம் ; அது சாத்தியமா? என்பது கேள்விக்குறியே. அரசுக்கு வருவாய் ஈட்டும் பதிவு கட்டணங்களை குறைத்தால் அரசின் ஏழைகளுக்கான திட்டங்களுக்கு நிதியின்றி போகக் கூடும்.
மொத்தத்தில் கொரோனா பிடியில் இருந்து தமிழகம் தப்பித்தது, அதற்காக தீவிரமாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிதி நெருக்கடிகளை சமாளிப்பதுடன் அடுத்தகட்ட வளர்ச்சிகளை உருவாக்க தயாராகிவிட்டார்கள் அதை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறது தமிழகம்.