நாடும் நடப்பும்

தமிழகத்தின் நலம் காக்க அண்ணா தி.மு.க. ஆட்சியே தொடர வேண்டும்

கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் நடந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். இம்முறையும் சட்டமன்ற தேர்தலில் இரு முக்கிய போட்டியாளர்களாக இருப்பது அண்ணாதி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட்டணியும் தான்.

தேசிய கட்சிகளில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா அண்ணா தி.மு.க.வில் இணைந்து இருக்கிறது. நாடெங்கும் செல்லா காசாகி விட்ட காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் களத்தில் இருக்கிறார்கள்.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதாவுடன் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மீண்டும் அண்ணா தி.மு.க வெற்றி பெற்று நல்லாட்சியை தொடர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முன்பு எம்ஜிஆர், அவர் அடிசுவட்டில் ஜெயலலிதாவும் சூறாவளி பிரச்சாரத்தின்போது இருந்த எழுச்சி இன்று தற்போதைய அண்ணா தி.மு.க. தலைவர்களுக்கு இருப்பது தெரிகிறது.

ஜெயலலிதாவை எம்ஜிஆரின் வாரிசு என்று தமிழகம் ஏற்றுக்கொண்டது. ஜெயலலிதாவும் எம்ஜிஆரை போல் பாமர தமிழர்களின் நலன் காக்க நல்லாட்சி செய்தார். தமிழகத்திற்கு ஏதேனும் அநீதி என்றால் அதை தட்டிக் கேட்டார், அதை ஒருபோதும் அனுமதிக்கவும் இல்லை.

எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியினை அவரது அடிச்சுவடியில் ஜெயலலிதா நடத்திக் காட்டி தமிழகத்தை வளமான மாநிலமாக உயர்த்தியும் காட்டினார். ஜெயலலிதாவின் ஆட்சியின்போது தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு இணையான முன்னேற்றம் கண்டதை நாடே அறியும். தொழில் வளர்ச்சிக் குறியீடுகள் முதன்மை மாநிலமாக உயர்ந்தது. அது மட்டுமின்றி மகளிர் நலன் மீது கவனம் செலுத்தி தமிழக பெண்களின் மேம்பாட்டை உறுதி செய்தார்.

கடந்த 10 ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சியில் தாலிக்கு தங்கம், பசியால் வாடக் கூடாது என்ற உன்னத நோக்கத்துடன் அனைவருக்கும் 20 கிலோ விலையில்லா அரிசியும் தந்தார்கள்.

இலவசம் என்ற பரவசம் ஓர் முதல் உதவி போன்றதே, அந்த நோய்களுக்கு நிரந்தர தீர்வு கிடையாது அல்லவா? அதையும் உணர்ந்தே ஜெயலலிதா குறைந்த விலையில் தரமான, ருசியான உணவை வாங்கிச் சாப்பிட்டு மகிழ ‘அம்மா உணவகம்’ திட்டத்தையும் அறிவித்தார்.

இன்று அவை தமிழகமெங்கும் அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சீரும் சிறப்புமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளின் அருகாமையில் இருக்கும் பல ‘அம்மா உணவகங்களில்’ ஏழை நோயாளிகள் மட்டுமின்றி அந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூட ரசித்து, ருசித்து சாப்பிடுவதை பார்க்க முடியும்!

இத்திட்டம் இன்றோ கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் என பல்வேறு மாநிலங்களில் சிறப்பாகவே நடந்து கொண்டு இருக்கிறது.

பசியால் தமிழகத்தில் யாரும் தவிக்க கூடாது என்பதே ஜெயலலிதாவின் உன்னத நோக்கம். அதை உறுதிப்பட நடத்திய பெருமை தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் உண்டு.

எம்.ஜி.ஆர் கொண்டு வந்த பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி ஜெயலலிதா ‘சத்தான’ உணவு திட்டமாக மாற்றினார்.

பள்ளிகளுக்கு செல்லும் ஏழை குடும்பத்து பிள்ளைகள் ஆரோக்கியமாக படித்து நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் சூழ் நிலையை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

அவர் வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசு மிகக் கடுமையான காலகட்டமான கொரோனா பெரும் தொற்று காலத்தில் ஏழை குடும்பத்தினருக்கும், நிரந்தர வீடு இல்லா தினக்கூலி தொழிலாளர்களுக்கும் ஒரு வேளை மதிய உணவையாவது பெற முடிந்த பள்ளிக் குழந்தைகளுக்கு அந்த ஊரடங்கு சமயத்தில் சாப்பிட வழி தெரியாமல் திணறினர்.

எடப்பாடி அரசு எல்லா அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டார்.

கையை வீசியபடி காலி பையுடன் ரேஷன் கடைகளுக்கு வந்தவர்களுக்கு ஒரு மாத உணவுக்குத் தேவையான மளிகை சாமான்களையும் ரூ.1000மும் பெற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்ப வைத்தனர்.

இப்படி அம்மா உணவகங்களும் பொது விநியோக நிறுவனத்தையும் அற்புதமாக செயல்பட வைத்த பெருமை அண்ணா தி.மு.க. அரசையே சாரும்.

இலவசமாக அரிசி வழங்கிய ஜெயலலிதாவை தமிழகம் அன்னபூரணியாக பார்த்தது.

அம்மா உணவகத்தையே ஏழைகள் பசியாற வைத்த அட்சய பாத்திரமாக மாற்றிய பெருமை எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் உண்டு.

ஆக அண்ணா தி.மு.க. ஆட்சி மீண்டும் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்தால் தற்போதைய நல்லாட்சி தொடரும். அது மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்கும்.

ஆக அண்ணா தி.மு.க.வின் பிரச்சார வாசகமாக இருக்கும் ‘தி.மு.க.வுக்கு போடும் ஓட்டு உங்கள் நலனுக்கு வேட்டு’ என்பதிலும் , ‘நாடு நலம் பெற ‘இரட்டை இலைக்கு’ வாக்களியுங்கள் என கேட்பதில் இருக்கும் உன்னதத்தையும் புரிந்துகொண்டு தமிழகம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் தரும் விதத்தில் மகத்தான வெற்றியை ஏப்ரல் 6 அன்று நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ‘இரட்டை இலைக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை தமிழகம் தரத் தயாராகி விட்டது.


மேலும் படிக்க:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *