சென்னை, செப்.18-–
தமிழகத்தின் ஏற்றுமதி யில் காஞ்சீபுரம் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நவீன தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு, ஏற்றுமதியில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாநிலத்தின் மேம்பட்ட உள்கட்டமைப்பு பல்வேறு ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு தாயகமாக இருக்கிறது. பல்வேறு வசதி, வாய்ப்புகள் மற்றும் தொழில் செய்வதற்கு உகந்த சூழல் இருப்பதால் தமிழகம் உற்பத்தி யாளர்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது.
தமிழ்நாடு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக் ஹார்டு வேர், கடல்சார்ந்த பொருட்கள், பட்டு சேலைகள், கண்ணாடி, சாப்ட்வேர் பொருட்கள், நார் பொருட்கள், பம்புகள், கிரானைட், கிரைன்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பாரம்பரியமாக ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யும் 3-வது பெரிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகம் 9.25 சதவீத பங்களிப்பினை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்த மட்டில் ஏற்றுமதியில் மாவட்டங்கள் கொடுக்கும் பங்களிப்பு தொடர்பான விவரத்தை மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
இதில், 39.94 சதவீத பங்களிப்பினை வழங்கி காஞ்சீபுரம் முதல் இடத்தில் உள்ளது.
இதையடுத்து 15.45 சதவீதத்துடன் சென்னை 2-ம் இடத்திலும், 7.58 சதவீதம் கொடுத்து கோவை 3-வது இடத்திலும் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக 6.67 சதவீதத்துடன் திருவள்ளூரும், 6.06 சதவீதத்துடன் கிருஷ்ணகிரி யும், 2.31 சதவீதத்துடன் வேலூரும், 1.76 சதவீதத்துடன் கரூரும், 1.61 சதவீதத்துடன் தூத்துக்குடி யும், 1.45 சதவீதத்துடன் ஈரோடும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.