தோல்வி பயத்தில் ஸ்டாலின் – ராகுல்
வெற்றி சரித்திரம் படைக்க வரும் இரட்டை இலை, மாம்பழம், தாமரை
சமீபத்தில் தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் ராகுல்காந்தி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.கவை மிகச் சிறந்த கட்சியினர் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார். கூடவே அண்ணா தி.முக.வும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறியுள்ளது தமிழக வாக்காளர்களை சிந்திக்க வைக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு நடத்திய 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் மீது மாற்றாந்தாய் மகப் போக்கினையும் அதற்குத் துணை நின்ற தி.மு.கவையும் மறக்க முடியுமா?
அந்தக் கட்டத்தில் தமிழகம் கண்ட சறுக்கல்களை சரி செய்து தமிழகத்தை வெற்றி நடை போட வைத்தது ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடத்திய அண்ணா தி.மு.க.வாகும்.
மாநில அரசால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவே முடியாது. குறிப்பாக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சினை, எரிபொருள் குறிப்பாக நிலக்கரி, எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பிரச்சினை போன்ற சிக்கல்களைத் தீர்க்க மத்திய ஆட்சியாளர்களின் துணை தேவைப்பட்டு தானே ஆகும்.
ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்த நாளில் காங்கிரஸ், தி.மு.க. தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த அநீதிகளை வெட்டவெளிச்சம் போட்டு காட்டியே அண்ணா தி.மு.க. 2014 பாராளுமன்ற தேர்தலில் வென்று மத்தியில் பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்வில் அவரது ஆட்சிக்கு முழு ஆதரவு தரும் உறுதியையும் தந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவிகளைப் பெற உறுதியையும் பெற முடிந்தது.
ராகுல்காந்தி கூறுவதுபோல் பாரதீய ஜனதாவுடன் ஏதோ அரசியல் ஆதாயத்திற்காக அமைந்த சந்தர்ப்பவாதக் கூட்டணி கிடையாது. தமிழகத்தின் நலன் காக்க உருவான முற்போக்கு கூட்டணி ஆகும்.
அ.தி.மு.க.வின் தினம் ஓர் போராட்டம்
மன்மோகன் சிங், கருணாநிதி ஏற்படுத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் துரோகம் இழைத்ததை அப்போது தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. தினம் ஒரு போராட்டம் என்று களப்பணியாற்றி தமிழகத்திற்கு ஏற்பட்டு வந்த அநீதிகளை எதிர்த்தார் ஜெயலலிதா.
மாநிலத்தின் அதிகாரங்கள் பறிபோனது; ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் தனியார் டிவி சேனல்களை கண்டு ரசிக்க தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனமாக துவங்கப்பட அனுமதியை மறுத்ததும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான்.
ஒரு பக்கம் இலவச டிவிகளை தந்தது தி.மு.க. என்றாலும் அதில் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டுமானால் சன் டிவி நடத்தும் கேபிள் டிவியை தான் வாங்கிட வைத்தனர்.
கோடிக்கணக்கான டிவிக்கள் விநியோகிக்கப்பட்ட போது ஆனந்த மகிழ்ச்சியில் இருந்தது எஸ்சிவி கேபிள் டிவிகாரர்கள் தானே!
பின்னர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில வருடங்களில் மத்திய ஆட்சியில் பாரதீய ஜனதா பிடித்த பின்னர் தமிழக அரசு கேபிள் துவங்கப்பட்டு தனியார் கேபிள் டிவிக்கள் சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்தது! தமிழகம் அதை மறந்து விடவில்லை.
இன்றும் கடந்த 10 ஆண்டு ஆட்சியின் போது தமிழகத்தில் எஸ்சிவியின் ஆதிக்கத்தை எந்த விதத்திலும் அடக்கி விடாமல் சுதந்திரமாக நடந்து கொண்டிருப்பதை தடுக்காத அரசு அண்ணா தி.மு.க.வாகும்.
அரசியல் ஆதாயத்துக்காக மத்திய அரசின் நட்பையும் கூட்டணியையும் அரசியல் மற்றும் சந்தர்ப்பவாத வியாபார ரீதியான நோக்கத்தோடு எந்த நிலையிலும் அண்ணா தி.மு.க. செயல்பட்ட சரித்திரம் கிடையாது.
எல்லாம் எல்லோருக்கும்
ராகுல் காந்தியும் ஸ்டாலினும் கூட்டாக செய்த பிரச்சார பேச்சுக்கள் எஸ்சிவி கேபிள் சேனல்களில் மட்டுமின்றி தமிழக அரசு கேபிள் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகியதை ராகுல் புரிந்து கொள்ளவேண்டும்!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற நாள் முதலாக தமிழக உரிமைகள் பறிபோகவில்லை, மாறாக உரிமைக்கு குரல் கொடுத்த போதெல்லாம் அதைக் காது கொடுத்து கேட்டு அதில் இருக்கும் நியாயங்களைப் புரிந்து கொண்டு தி.மு.க. –- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் கால அவலங்களை சீர் செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாதகமாக இருந்த தடை கற்களை அகற்றியதை தமிழகம் மறந்து விடாது.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கக் கூட வழிவகை காணாத தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் சதிகளை தவிடு பொடியாக்கி தமிழகத்தின் காவிரி உரிமைகளை நமது அரசியல் சாசனத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாற்றியது ஜெயலலிதாவின் சாமர்த்தியம்; அதற்கும் துணை நின்றது பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு தான்!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மாதா மாதம் பெட்ரோல் விலை கூடியது, ஆனால் நாட்டில் இருந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது, ஏழைகள் கண்ணீரை துடைக்க அந்த வருவாய் உபயோகிக்கப்படவே இல்லை!
ஊழல் இல்லை
ஆனால் இன்றோ தமிழகத்தில் எல்லாவித மத்திய அரசின் ஒதுக்கீடுகள் உரிய அளவு, உரிய நாளில் வந்துவிடுகிறது. காரணம் ஈட்டப்படும் வரி வருவாய் மத்திய அரசின் கஜானாவில் இருந்து கசிந்து ஊழல் பெருச்சாளிகளின் வங்கிக் கணக்கிற்கு திருப்பி விடப்படவில்லை!
புயல் சேதத்திற்கு தமிழகம் கேட்ட நிதி உதவிகள், எரிபொருள் உதவிகள், கடந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்று பரவல் கட்டத்தில் தேவையான மருத்துவ வசதிகள், ஊரடங்கு காலத்தில் தவித்த ஏழைகளுக்கு உதவிட இலவசமாக உணவுப்பொருட்கள் தருவதற்கும் ரொக்கப் பணமாக தருவதற்கும் போதிய நிதிகளை தந்தது மோடி தலைமையிலான மத்திய அரசு தான்.
உர விலைகள் ஏற்றம், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதித்தது எல்லாமே ராகுல், சோனியா குடும்பத்து நிழல் அரசாக இருந்த மன்மோகன் சிங் மற்றும் கருணாநிதி கூட்டாட்சியாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான்.
அந்த அவலங்களை இனியும் தமிழகம் சந்திக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் ஜெயலலிதா. அதை உறுதியாக நம்பித்தான் தமிழகம் ஜெயலலிதாவிற்கு மகத்தான வெற்றியை தந்து ஆட்சியில் அமர்த்தியது.
ஜெயலலிதாவின் அரசியல் முதிர்ச்சி
ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு இடையூறாக இருந்த அப்போதைய மத்திய அரசை வீழ்த்தவே தமிழகம் மகத்தான வெற்றியை அண்ணா தி.மு.கவிற்கு 2014 பாராளுமன்றத் தேர்தலில் வழங்கியது. அந்த நாளில் தமிழகத்திற்கு உரிமையுடன் கேட்டு பெறும் சக்தி ஜெயலலிதாவிடம் இருந்தது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பாரதீய ஜனதாவுடன் கூட்டு என்பதில் உறுதியாக இருந்தார், ஆட்சியில் இடம் கேட்டு, பேரம் பேசி மத்திய அரசின் காலடியில் சரண் அடைந்தவர் இல்லை! அது தான் ஜெயலலிதாவின் அரசியல் முதிர்ச்சி.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அண்ணா தி.மு.க. பிளவு பட்டு தடுமாறி கொண்டிருந்த நிலையில் தட்டுத்தடுமாறி அண்ணா தி.மு.க. ‘முதல் உதவி சிகிச்சைகளை’ துவக்கி ஒரு வழியாக ஆட்சியில் கவனம் செலுத்த முனைந்த போது 2019ல் மீண்டும் பாராளுமன்றத் தேர்தல் வந்து விட்டது.
அந்தக் குழப்பமான காலக்கட்டத்தில் தமிழகம் திமுக –- காங்கிரஸ் பிரச்சாரத்தில் மயங்கி அண்ணாதி.மு.க. வேட்பாளர்களை தோற்கடித்தும் விட்டது.
ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் உரிமைகளையோ, தேவைகளையோ அரசியல் ஏமாற்றத்தால் மாற்றாந்தாய் போக்குடன் பார்க்காத மத்திய அரசை புதிய கோணத்தில் அண்ணா தி.மு.க.வை பார்க்கத் துவங்கிய நாளில் அவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து இன்றோ சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்குகிறது.
இந்தக் கூட்டணி வென்றால் தங்களது அரசியல் நாடகங்கள் மீண்டும் முகத்திரை கிழித்து வெட்ட வெளிச்சமாகிவிடும் என்ற பயத்தில் ராகுல், அண்ணா தி.மு.க. பாரதீய ஜனதா கூட்டணியை விமர்சித்து இருக்கிறார்.
ஊடகங்கள் தி.மு.கவிற்கு சாதகமான அலை என்பதை கூறுவது 2019–ல் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் தான்! அன்று இருந்த நிலையா இன்று தொடர்கிறது? தமிழகம் காங்கிரசையோ தி.மு.க.வையோ நம்பாது. நல்லாட்சி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் தலைமையில் தமிழகமெங்கும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெற்றிக் கூட்டணி
ஜெயலலிதாவின் நிழலாக இருந்த தலைவர்கள் இன்று நிஜமான முகங்களாக மக்கள் முன் தோன்றி ஆட்சியை நடத்த மீண்டும் சந்தர்ப்பம் கேட்கிறார்கள்.
மத்திய – மாநில அரசுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை தமிழகத்தில் உருவாக்கி அண்ணா தி.மு.க. தலைமையில் நல்லாட்சி தொடர வெற்றி வியூகம் அமைத்து தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
தி.மு.க.விற்கு தோல்வி பயத்தை தரும் விதமாக அண்ணா தி.மு.க. பிரச்சார கூட்டங்களில் மக்களின் கூட்டமும் வரவேற்பும் இருப்பதைப் பார்க்கிறோம்.
இது சட்டமன்ற தேர்தல், அண்ணா தி.மு.கவின் ‘இரட்டை இலையும் பாட்டாளி மக்கள் கட்சியின் ‘மாம்பழமும்’, பாரதிய ஜனதாவின் ‘தாமரையும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் செழிப்பாக ஆட்சியைத் தொடர வாக்களித்து தமிழகத்தில் வளர்ச்சி சரித்திரம் தொடர வைக்க தயாராகி விட்டது.
அதைச் சுட்டிக் காட்டும் விதத்தில் தான் தனது பிரச்சார உரைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுவது : – ‘எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடும் பாரதீய ஜனதா நம்முடன் உள்ளது. பா.ம.க. வலிமையான கட்சி, மக்களின் செல்வாக்கான கட்சி. அப்படிப்பட்ட தலைவர்கள் உள்ள கூட்டணி நம் கூட்டணி’.
ஆக , தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுத்த அண்ணா தி.மு.க தொடர்ந்து நல்லாட்சியைத் தரும் என்ற உறுதியில் பாரதீய ஜனதா அயராத தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் இவ்வேளையில் அண்ணா தி.மு.க – பாட்டாளி மக்கள் கட்சி –பாரதீய ஜனதா கட்சியின் மகத்தான கூட்டணியின்
வெற்றிச் சினனங்களான இரட்டை இலை, மாம்பழம், தாமரை சின்னங்களுக்கே வாக்களித்து மீண்டும் ஒரு வெற்றிச் சரித்திரம் படைத்திடுவோம் வாரீர்.