நாடும் நடப்பும்

தப்பாக நினைத்தோமே – மு.வெ.சம்பத்

சாரதியும் கண்ணனும் சந்தித்தது ஒரு பல் பொருள் அங்காடியில் தான்.

அன்று பல் பொருள் அங்காடியில் ஒருவன் சில பொருட்களை களவாடுவதைக் கண்ட சாரதி அவனைப் பிடிக்க.,அவன் திமிரிக்கொண்டு செல்ல முயன்ற போது, கண்ணன் அவனது கையைப் பின்னால் கட்டி அவனை அந்த அங்காடி ஓனரிடம் ஒப்படைத்தனர்.

பின் அவர் காவல்துறைக்கு போன் செய்து அவனை ஒப்படைத்து விட்டு சாரதி மற்றும் கண்ணனிடம் நன்றி சொன்னார் அங்காடி ஓனர்.

இதற்குப் பின் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினார்கள். இருவரும் தங்கள் ஓய்வு நேரத்தில் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இருவர் குடும்பங்களும் நல்ல முறையில் பரஸ்பரமாக இணைந்தனர்.

சாரதியின் ஒரே மகளும் கண்ணனின் ஒரே மகளும் ஒரே பள்ளியில் படிப்பதால் தினமும் சாரதி மற்றும் கண்ணன் பள்ளியில் சந்தித்துக் கொள்வார்கள்.

சாரதிக்கு வெளிப் பழக்க வழக்கங்கள், பெரிய மனிதரின் தொடர்பு அதிகம் என்பதால் கண்ணன் தனக்கு வரும் பிரச்னைகளை சாரதியை வைத்து சுலபமாக முடித்துக் கொள்வார்.

சாரதி மனைவி கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவர். அதனால் அவர் வீட்டில் நிறையக் கைவினைப் பொருட்கள் ஆங்காங்கே இடம் பிடித்து வீட்டை அழகூட்டின. கண்ணனின் மனைவியும் சாரதி மனைவியிடம் கைவினைப் பொருட்கள் செய்வதைப் பற்றிக் கற்றுக் கொண்டு தனது வீட்டையும் சிறிது அலங்கரித்தார்.

பள்ளிப் படிப்பு முடிந்து சாரதி மற்றும் கண்ணன் மகள்கள் அவர்களுக்கு விருப்பமான படிப்பைப் படிக்க வேறு வேறு கல்லூரிகளில் சேர்ந்தார்கள். சாரதி மற்றும் கண்ணன் சந்திப்பு நாளடைவில் குறைந்தது. கண்ணன் விடுமுறை நாட்களில் சாரதி வீடு சென்று அவரை சந்தித்து உரையாடி விட்டு வருவார். இவர்களது மனைவிமார்கள் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள். மகள்கள் நலம் மற்றும் மேன்மை பற்றியே இவர்களது பேச்சு அமையும்.

சாரதி மற்றும் கண்ணன் மகள்கள் படிப்பு முடித்து நல்ல வேலையில் சேர்ந்தார்கள். வேலையில் நிரந்தரமானதும் சாரதி மற்றும் கண்ணன் தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்யலாமென தீர்மானித்து ஆக்க வேலையில் இறங்கினார்கள். கண்ணனிடம் சாரதி நான் உன் மகளுக்கும் சேர்த்து பையன் பார்க்கிறேன் என்றார்.

நாட்கள் செல்லச் செல்ல, கண்ணன் எதிர்பார்த்தபடி ஒரு வரனும் அமையாதது கண்டு வருத்தமடைந்தார். சாரதியை மட்டும் நம்பியிருப்பது நல்லதல்ல என்று மனதில் கூறிக் கொண்டு அவர் சாரதி வீட்டிற்கு வந்தார். கண்ணன் சாரதியிடம் ஏதாவது நல்ல செய்தி உண்டா என கேட்க சாரதி உன் மகளுக்கு வெளி நாட்டில் வேலை செய்யும் பையனைப் பார்க்கலாமா என்று கேட்க பரவாயில்லையென கண்ணன் கூற சீக்கிரம் முடித்து விடலாம் என்றார் சாரதி.

மேலும் சாரதி கண்ணனிடம் எனது மகள் வெளி நாட்டு பையன் வேண்டாம் என்று சொல்லி விட்டார் எனக் கூறினார்.

அன்று கண்ணன் வீட்டிற்கு வந்த சாரதி நாளை உனது மகளைப் பெண் பார்க்க வருகிறார்கள். பையன் சிங்கப்பூரில் வேலை செய்கிறான் என்றார். கண்ணன் உடனே நன்றி சொல்லி விட்டு நாளை நீ கட்டாயம் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

மறுநாள் பெண் பார்க்கும் படலம் முடிந்து எல்லோருக்கும் பெண்ணை பிடித்து விட்டதால் நீங்கள் உங்கள் பெண்ணுக்கு செய்வதை செய்யுங்கள். நாங்கள் ஜாதகப் பொருத்தம் பார்த்து விட்டோம் என்றும் வரதட்சணை பேச்சே கூடாது என்றும் திருமண தேதியை சீக்கிரம் குறித்து விடுங்கள் என்று சொல்லி விட்டு புறப்பட்டார்கள்.

கண்ணன் மானசீகமாக சாரதியிடம் நன்றி சொல்லிய பின், சாரதி மனைவியிடம் என்ன உங்க பெண்ணுக்கு எப்போது என்று கேட்க சாரதி மனைவி, எனது கணவர் இதுவரைக்கும் உங்கள் பெண்ணிற்குத் தான் வரன் பார்த்தார்.

எங்களது பெண்ணிற்கு இனிமேல் தான் முயற்சியெடுக்க வேண்டுமெனக் கூற, கண்ணன் நாம் சாரதியை தப்பா நினைத்தோமே, நம் பெண்ணிற்கு தான் இவ்வளவு நான் அலைந்திருக்கிறார் மனிதர். நம் குடும்பத்தின் மீதும் நட்பின் மீதும் என்னவொரு அக்கறை என்று நினைத்தபோது, சாரதி நான் கிளம்பவா எனக் கேட்க கண்ணன் இரு அவசரப்படாதே உனது பெண்ணிற்கும் சீக்கிரம் வரன் அமையும் என்று சொல்ல அப்போது சாரதியின் கைப்பேசி உறக்கத்திலிருந்து விழித்து சப்தம் செய்ய சாரதி நீங்கள் யாரெனக் கேட்க எதிர் திசையில் நான் பெங்களுரிலிருந்து பேசுகிறேன்.

கும்பகோணத்தில் உங்கள் அப்பாவும் எங்கள் அப்பாவும் நண்பர்கள். எங்கள் பையனுக்கு உங்கள் பெண்ணைக் கேட்கலாமெனத் தான் உங்களைத் தொடர்பு கொண்டேன். ஜாதகப் பொருத்தம் எல்லாம் சரியாக உள்ளது. நீங்கள் சரியென்று சொன்னால் வரும் வெள்ளிக் கிழமை பையனுடன் நாங்கள் வருவோமெனக் கூற சாரதி உடனே சரியென்று கூறினான்.

கண்ணன் சாரதியிடம் இரண்டு திருமணங்களும் ஒரே திருமணக்கூடத்தில் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று கூற சாரதி கண்ணனை கட்டாயம் பெண் பார்க்கும் நிகழ்வுக்கு வாருங்கள் பேசி விடலாம் என்றதும் அங்கு ஏற்பட்ட சிரிப்பொலி அடங்குவதற்கு முன் சாரதி தனது வாகனத்தில் அமர்ந்தார். அப்போது சாரதி செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்த கண்ணன், உணவில் உப்பு இல்லாமல் கூட இருக்கலாம்; ஆனால் வாழ்க்கையில் நட்பு இல்லாமல் இருக்க முடியாதென என தன்னையறியாமல் சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published.