தலையங்கம்
உலகின் சிறந்த தபேலா இசைக் கலைஞர்களில் ஒருவரான ஜாகிர் ஹுசைன் காலமானார். அவருக்கு வயது 73.
அவரது மறைவு உலக இசை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்தியப் பாரம்பரிய இசையின் சிகரம் சரிந்து விட்டது.
தாள லயத்துடன அவரது கைவிரல்களின் சதிராட்டம் இசையின் உயிர் நாடியாய் உலகெங்கும் இசைத்தது . ஆகவே அவரது மறைவு உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களின் இதயங்களில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது.
அவருடைய உடல் இறுதி மரியாதைகளுக்குப் பிறகு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பல ரசிகர்கள் சூழ்ந்து இருக்க கண்ணீர்மல்க பிரியாவிடை தரும் காட்சிகள்: அவர் மீது இருந்த மரியாதையை சுட்டிக்காட்டுகிறது,
ஜாகிர் ஹுசைன், ஒரு இசைக்கலைஞராக மட்டுமல்லாது தபேலாவை உலகளாவிய கலை வடிவமாக உயர்த்திய முன்னோடி. பண்டிட் சிவ்குமார் சர்மா (சந்தூர்) மற்றும் பண்டிட் ஹரிபிரசாத் சௌரசியா (குழல்) ஆகியவர்களுடன் இணைந்து அவர் நிகழ்த்திய ஜுகல் பந்திகள் இந்திய கிளாசிக்கல் இசையின் வரலாற்றில் உச்சம்.
தபேலாவின் மிகுந்த சிக்கலான தாளங்கள் சந்தூரின் மென்மையான ஒலியுடன், குழலின் ஆன்மீக ஒலிகளுடன் ஒன்றிணைந்த அவர்களின் இசை நிகழ்ச்சிகள் இன்றும் மக்களின் நினைவிலிருந்து நீங்காதவை; காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருப்பவை.
உலகின் பல்வேறு பிரபல கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்த்திய அவர், தபேலாவை உலகத் தரத்தில் முக்கியமான இன்னிசைக் கருவியாக உயர்த்தினார்.
பாப் இசையின் மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்கு ஜாகிர் உசேன் மீது அபரீத ஈர்ப்பு இருந்தது, இருப்பினும் அவர்களது கூட்டணியில் எந்தவொரு அதிகாரப்பூர்வ இசைப் படைப்பும் வெளிவரவில்லை. ஆனால் மைக்கேல் ஜாக்சன் இவரது தபலா திறன் பிரமிக்க வைத்து இருப்பது உண்மை என்று புகழாரம் சூட்டினார் மைக்கேல் ஜாக்சன்.
பஞ்சாப் கரானாவின் பாரம்பரிய கலைஞராக பிறந்த ஜாகிர் ஹுசைன், தமது கடின உழைப்பால் புதுப்புது அம்சங்களை தபேலாவில் கற்றுக்கொண்டு வாசித்துக்காட்டிய ஆர்வம் அவருக்கு தனித்துவமான அடையாளத்தை தந்துள்ளது .
அவரது இசைப் பயணம் இந்திய மரபு இசையின் எல்லைகளைத் தாண்டி பிற கலாசாரங்களுடனும் இணைந்து புதிய வடிவங்களை உருவாக்கியது.
தபேலாவின் மீது அவர் கொண்டிருந்த ஆளுமை ஒப்பற்றது; அவரது விரல்கள் இசைக்கருவியில் நடனம் ஆடியதைப் போல ஒலிகளை உருவாக்கின, கேட்பவர்களின் இதயங்களை வருடின !
1951-ஆம் ஆண்டு பிறந்த அவர்,1988 இல் பத்மஸ்ரீ, 2002 இல் பத்ம பூஷன் மற்றும் 2023 இல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றார்.
இசைத் துறையின் ஆஸ்கார் என போற்றப்படும் கிராமி விருதை நான்கு முறை பெற்றவரும் ஆவார்.
உஸ்தாத் ஜாகிர் ஹுசைனின் விரல் தந்து கொண்டிருந்த தாளலயங்கள் இன்று ஓய்ந்திருக்கலாம்; எனினும் அவர் இசைத்த இசை வெள்ள அதிர்வுகள், காலத்தை வென்று காவியமாய் நம்மோடு இருக்கிறது, வரும்கால சந்ததியினருக்கு இன்றைய இசையின் அழியாச் சுவடாக காலக் கண்ணாடியாக நிலைத்திருக்கிறார் ஜாகிர் ஹுசைன்.
––––––––––––––––––––––––