செய்திகள்

தபால் வாக்குகளை வழக்கம்போல் முதலில் எண்ணி அறிவிக்க வேண்டும்

செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 1–

16 கேமராக்களை வைத்துக்கொண்டு தியானம் என்ற பெயரில், நரேந்திர மோடி அரசியல் நாடகம் நடத்துகிறார் என்று விமர்சித்த காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, இதுவரை கடைபிடித்து வந்துள்ள தேர்தல் நடைமுறைப்படி, தபால் வாக்குகளை முதலில் எண்ணி அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-–

கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டத்தை கடைபிடிக்காமல் தங்கள் சட்டப்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வந்தனர். தற்போது தபால் வாக்குகளை எண்ணும் முறையிலும் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதன்படி வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குகளை எண்ணி முடித்த பின் கடைசியாக தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தபால் வாக்குகள் முதலில்…

கடந்த 2021–ம் ஆண்டு தேர்தல் வரையில் தபால் வாக்குகள் தான் முதலில் எண்ணப்பட்டு அதனுடைய முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மோடி ஆட்சியில் தேர்தல் ஆணையர்களை தங்கள் வசதிப்படி வளைத்துக் கொண்டு, தபால் வாக்குகளை கடைசியாக எண்ணி அறிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக வெளியாகிற செய்திகள் அதிர்ச்சியாக உள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களுடைய தேர்தல் முடிவுகளில் தபால் வாக்குகளில் குளறுபடி செய்து வெற்றியை பறித்தனர். அதே முறையில் இந்தியா முழுவதும் செய்வதற்காக தபால் வாக்குகளை கடைசியில் எண்ணி அறிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தி, அரசியலமைப்பு சட்ட நடைமுறைப்படி தபால் வாக்குகளை முதலில் எண்ணி அறிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தி கூறிக் கொள்கிறோம்.

மோடியின் தியான நாடகம்

தியானம் செய்பவர்கள் எல்லோரும் நாட்டு நலன் மக்கள் நலனுக்காக தியானம் மேற்கொள்ளும் பழக்கத்தை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் வெறுமனே தேர்தல் விளம்பரத்திற்காக, அரசியல் நாடகமாக தியானத்தை யாரும் செய்வதில்லை ஆனால் நரேந்திர மோடி அவருடைய தொகுதியில் தேர்தல் நடைபெறும் நாளில் தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியாக தியான நாடகத்தை நடத்தி வருகிறார். இது பிரச்சாரமாக மாறக்கூடியது என்று நாங்கள் முன்பே கூறி, இதனை அனுமதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் கூறினோம். ஆனால் தேர்தல் ஆணையம் அதனை புறக்கணித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தியானம் என்பது தனிமையில் அமர்ந்து செய்யக்கூடிய ஒன்று. 16 கேமராக்களை வைத்துக்கொண்டு யாரும் தியானம் செய்ய மாட்டார்கள். ஆனால் நரேந்திர மோடி 16 கேமராக்களுக்கு முன் தியானம் செய்வதாக நாடகம் நடத்துகிறார். விவேகானந்தர் அனைத்து மக்களுக்குமான தலைவராக விளங்கினார். ஆனால் அதற்கு நேர் மாறாக நரேந்திர மோடி இதுபோன்று தியான நாடகம் நடத்தி விவேகானந்தருக்கு அவமானம் தேடி தந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

நூலகம் கணினி மையம்

பாலம் கல்யாணசுந்தரம் 42 ஆண்டுகள் நூலகத்தில் பணியாற்றியவர். அவர் கலைஞர் நூற்றாண்டில் நூலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பி உள்ளார். கூகுள் நிறுவனத்திடம் பேசி அதனை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று நாங்களும் கோரிக்கை வைக்கிறோம். பாலம் கல்யாண சுந்தரம் வேண்டுகோளை நாங்கள் முதலமைச்சர் முன் சமர்ப்பித்து, அதனை காங்கிரஸ் சார்பில் நாங்களும் பரிந்துரை செய்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் மடிந்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது. 7 கட்டத் தேர்தல்களில் காங்கிரஸ் நிர்வாகிகளும் தோழமைக் கட்சி நிர்வாகிகளும் கடுமையாக உழைத்து களப்பணியாற்றி உள்ளனர். இறுதியாக தேர்தல் வாக்கு எண்ணும் நாளன்றும் 17 சி படிவங்களை வைத்துக்கொண்டு, அதன்படி வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்கு எந்திரத்தோடு ஒப்பிட்டு பார்த்து வாக்கு எண்ணிக்கையை உன்னிப்பாக கவனித்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சியின் நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், உ. பலராமன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *