சிறுகதை

தபால் – ராஜா செல்லமுத்து

தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டு இரண்டு மூன்று நாட்களாக அல்லாடிக் கொண்டிருந்தான் சின்னவர் .

அந்த பாஸ்போர்ட் எப்படி தொலைந்தது ? எங்கு காணாமல் போனது ? என்று அவனுக்குத் தெரியாது .

ஆனால் போக்குவரத்தில் தான் தொலைந்து போயிருக்கும் என்று அவனுக்கு தெள்ளத் தெளிவாக விளங்கியது .

சென்னை நகருக்குள் இருக்கும் மக்கள் நெருக்கம். மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது இருக்கும் அதிகப்படியான பயணிகள், இப்படி ஏதோ இடத்தில்தான் தன்னுடைய பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாக நினைத்தான் சின்னவர்.

பணம் போயிருந்தால் கூட வருத்தப்பட்டு இருக்க மாட்டான். ஆனால் பாஸ்போர்ட் தொலைந்து அவனுக்கு மிக உறுத்தலாக இருந்தது .

அந்தப் பாஸ்போர்ட்டை வைத்து யாராவது தவறான முறையில் பயன்படுத்தினால் அது தனக்கும் பிரச்சனை. திருடியவன் எடுத்து செய்யும் வேலைகளை செய்யாத தவறுக்கு நான் மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற வருத்தம்.

அதை வைத்து ஒன்றும் செய்யப் போவதில்லை . ஆனால் ஏதோ ஒன்று செய்யலாம் என்று திருடியவன் நினைத்திருக்கலாம் ; அது விற்பனைக்கான பொருள் அல்ல . ஆனால் அதை விற்கலாம். சின்னவர் இருக்கும் புகைப்படத்திற்கு பதிலாக வேறொருவன் புகைப்படத்தை எடுத்து எதிரான வேலைகளை செய்யலாம் அல்லது விமான பயணத்திற்கு பயன்படுத்தி அதன் மூலமாக ஏதாவது ஒரு பிரச்சினைகளுக்கு உள்ளாகலாம்; இறுதியில் மாட்டிக்கொள்வது நாம்தான் என்று பலவாறாக குழம்பிக் கிடந்தான் சின்னவர்

அவன் மனது ஒரு நிலையில் இல்லாமல் இருந்தது.

வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் நம்மை திட்டுவார்கள் என்று பாஸ்போர்ட் தொலைந்து போனதைப் பற்றி யாருக்கும் சொல்லாமல் இருந்தான்.

இதை எப்படி எங்கே கேட்பது? அதில் முகவரி மட்டும் தான் இருக்கிறது .அதை எடுத்து நம் முகவரிகள் கொடுப்பதற்கு தகுந்த ஆட்கள் இங்கு இருக்கிறார்களா? அப்படி நல்ல மனிதர்கள் இந்த பூமியில் பிறந்து இருப்பார்களா? என்பது சந்தேகமே என்று சந்தேகக் கண்கொண்டு சமூகத்தைப் பார்த்தான் சின்னவர்.

பாஸ்போர்ட் தொலைந்து போன நேரத்திலிருந்து அவன் மனதில் பலவாறான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது.

யாரும் அந்த பாஸ்போர்ட்டை எடுத்து தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் புகார் செய்து பாஸ்போர்ட் காணாமல் போனதற்கான காரணத்தை சொல்லி எப்ஐஆர் போட்டான்.

இனி அந்தப் பாஸ்போர்ட்டுக்கு எனக்கும் சம்பந்தம் இல்லை. அது தொலைந்து விட்டது அதை எடுத்து யாராவது பயன்படுத்தினால் அது என்னை வந்து சேராது என்று உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கிக்கொண்டான்.

உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கியதில் அன்று இரவு நிம்மதியாக தூங்கினான் .

மறுநாள் காலை அலுவலகத்திற்கு கிளம்புவதற்கு தயாராக இருந்தான்.

அப்போது ஒரு தபால்காரர்

தம்பி உங்களுக்கு ஒரு போஸ்ட் என்று சொல்லி தபால நீட்டினார் போஸ்ட்மேன்

யாராக இருக்கும் என்று யோசித்தபடியே கவரைப் பிரத்தான் சின்னவர்.

அங்கே அவன் தொலைத்த பாஸ்போர்ட் தபாலில் வந்திருந்தது. அவனுக்கு ஒரே ஆச்சரியம். மனிதகுலம் எல்லாம் தவறானது என்று நினைத்துக் கொண்டிருந்த அவனது புத்தியில் அது தவறு என்று சுர்ரென்று உறைத்தது.

அந்த தபாலை அனுப்பியது யார்? என்று அவரை நன்றாக தேடினான். அதில் ஒன்றுமில்லை. யாரோ ஒரு புண்ணியவான் இந்த முகவரிக்கு அனுப்பி இருக்கிறார். அனுப்பிய தற்கான அடையாளமும் அதனைப் பற்றிய தடயங்களும் செல்போன் எண்ணும் ஏன் பாஸ்போர்ட்டை தொலைத்தாய்? என்ற அறிவுரையாே எதுவுமே இல்லை. அந்த தபால் உறையில் எங்கிருந்து வந்திருக்கும் என்று அவன் நினைத்த போது தபால் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலில் கூட உற்று நோக்கினான். அது அவ்வளவாக தெரியவில்லை எதோ அழிந்தொழிந்திருந்து.

முகம் தெரியாத ஒரு நபர் தான் தொலைந்து போன பாஸ்போர்ட்டை இந்த முகவரிக்கு அனுப்பி இருக்கிறார் என்று நினைத்தவன் ஓடிப்போய் காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் வாங்கினான்

தொலைந்து போன பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது ?என்று காவலர்கள் கேட்டபோது,

அவனால் பதில் சொல்ல முடியவில்லை .

தபாலைக் காண்பித்தான்.

அப்போது அவன் மனதில் ஒரு விஷயம் இடியாய் இறங்கியது

தன் வீட்டின் அருகே தபால் பெட்டி வைப்பதற்கு சண்டை போட்ட ஞாபகம் அவன் மனதில் நிழலாடியது

அறிவியல் செல்போன் இன்ஸ்டாகிராம் ,வாட்ஸ்அப் அப்படின்னு உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு .யாரு லெட்டர் எல்லாம் போடறாங்க . அது எங்க வீட்டு முன்னாடி இந்த தபால் பெட்டி வைக்கவேண்டிய அவசியம் என்ன? இது சரியா இருக்காது. இங்க வைக்க வேண்டாம். வேற எங்கயாவது வையுங்க என்று தபால் பெட்டி தன் வீட்டின் அருகே வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சின்னவருக்கு அவன் தொலைந்து போன பாஸ்போர்ட் தபாலில் வந்து சேர்ந்தது.

மறுநாளே ஓடிப்போய் எங்க வீட்டின் முன்னால் தபால் பெட்டி வையுங்கள் என்று தானாகவே முன் வந்து கேட்டான்.

சிரித்தபடியே இருந்தபோஸ்ட்மேன் அடுத்த முறை வரும்போது சொல்கிறேன் என்று சொன்னார்

தபாலை வாங்கிக் கொண்டு சென்ற சின்னவர், ஒரு தபால் பெட்டியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டபடியே தன் வீட்டிற்கு நடந்தான்.

Leave a Reply

Your email address will not be published.