சிறுகதை

தபால் பெட்டி – ராஜா செல்லமுத்து

செல்போன், இன்டர்நெட் வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் என்று எவ்வளவோ தொழில்நுட்ப வசதிகள் பெருகிக் கிடந்தாலும் இன்னும் அரசாங்க வேலை மற்றும் முக்கியமான பதிவுகளை அனுப்புவதற்கு பதிவு செய்வதற்கு தபால் நிலையங்களில் இருந்து அனுப்பும் தபால்கள் அதற்கு நாம் அனுப்பும் பதிவுத் தபால் இவைகள்தான் அரசாங்கத்தின் அத்தாட்சியாக இருக்கின்றன.

சிவா ஒரு வேலைக்காக விண்ணப்பித்தான். அந்த நிறுவனம் தற்போது இருக்கும் உயர்தர தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. தபால் நிலையத்தில் இருந்து தான் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என்று அடம்பிடித்து உடன்படிக்கை செய்து இருந்தது.

சிவா அந்த நிறுவனத்திற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு இப்போது இருக்கும் ஜிமெயில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் இன்னும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தில் அனுப்பலாமா ? என்று கேட்டதற்கு அந்த நிறுவனம் தபால் மூலம் தான் அனுப்ப வேண்டும் என்று சொன்னது.

அந்த விருப்ப விண்ணப்பக் கடிதம் எழுதிவிட்டு தபால் நிலையத்தில் இருந்து வாங்கி வந்த தபால் தலையை ஒட்டி தபால் பெட்டியில் போடுவதற்கு அவன் அலையாத இடம் இல்லை. இப்பதான் இங்கே ஒரு தபால் பெட்டி இருந்தது. மாத்திட்டாங்க. அங்கு இருந்துச்சு. இப்ப இல்ல.

இங்க ஒன்னு இருந்துச்சு. இப்ப இல்லை என்று ஆளுக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள். விரிந்து பரந்த மாநகரத்தில் தபால் பெட்டி என்பது தவிர்க்கக் கூடிய ஒன்றாகப் போய்விட்டது.

யாரும் அதை உபயோகிக்கவில்லை என்று அத்தனையும் எடுத்திருந்தார்கள். அதனால் சிவா எங்கெங்கேயோ தேடினான். அந்த கடிதத்தை அவனால் தபால் பெட்டியில் சேர்க்க முடியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தபால் பெட்டி இல்லை.

அன்று மாலை வரை அலைந்துவிட்டு தபாலை வீட்டிற்கு கொண்டு வந்தான்.

ஒருகாலத்தில் கடிதப் போக்குவரத்தும் தபால் நிலையங்களும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் போய் இன்று இன்டர்நெட், வாட்ஸ்அப் என்று தொழில்நுட்பங்கள் வந்த பிறகு தபால்பெட்டியை நாம் அடியோடு மறந்து விட்டோம்.

ஆனால் அதில் தான் உண்மையான உறவு இருக்கிறது. உண்மையான ஒரு பரிவு இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தான் சிவா.

அவன் ஒரு நாள் முழுக்க அலைந்து தபால் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியாததால் மீண்டும் தன்னுடைய தபாலை வீட்டுக்கு கொண்டு வந்தான்.

மறுநாள் தபால் நிலையத்திற்கே சென்று விசாரித்தான்.

அப்போது, ‘சார் இந்தா தபால் பெட்டி இங்க இருக்கு. இதில பாேடுங்க. இப்பல்லாம் யாருங்க தபால் பெட்டியில் போடறது. யாரும் சரியான நேரத்தில் எடுக்கிறது இல்ல. அதனால தான் நிறைய தபால் பெட்டிய நாங்க எடுத்துட்டோம். இதோ பாருங்க போஸ்ட்ட அதுல போட்டு போங்க’ என்று சொன்னார் அந்தத் தபால் அலுவலர்.

விருப்பக் கடிதத்தை தபால் நிலையத்தில் போட்டுவிட்டு வெளியே வந்தான் சிவா.

அவன் மனதில் ஆயிரம் கடிதங்கள் குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *