சிறுகதை

” தன் முன் நிலையை மறப்பவன் மூடன்….’’ | ராஜா செல்லமுத்து

ஜெயபாலுக்கு மதிய உணவு என்பது கல்லூரி காலத்தில் எப்போதும் எட்டாக்கனியே. அப்படி அவன் இருப்பதை பார்க்கும் முத்துவுக்கு என்னவோ போலாகும்.

“டேய் ஜெயபாலு.. மதியம் சாப்பிடாமல் இருந்தா உடம்பு ரொம்ப கெட்டுப் போகும்டா ‘ எதையாவது கொஞ்சம் சாப்பிடுடா என்று சொல்லி முத்துவைப் பார்த்த ஜெயபால்,

“நீ சொல்லிட்ட சாப்பிடுறதுக்கு நான் எங்க போறது?

“ஏன்… நீ இப்ப எங்க இருந்து வார?”

“ஹாஸ்டல்”

“ஓ… அங்க சாப்பிட எதுவும் தர மாட்டாங்களா?

“ம்ஹூகும்”

“ஏன்?”

அது பொது ஹாஸ்டல்டா

அங்க சாப்பிடுறதே பெரிய விஷயம்.

அத வேற பார்சல் கொண்டு வரணுமா?

நம்மால முடியாதுப்பா என்ற ஜெயபால் தினமும் மதியம் எதுவும் சாப்பிடாமலே தான் இருப்பான். இது முத்துவுக்கு என்னவோ போலிருக்கும்.

“ஜெயபால்”

ஒன்னையை மதியம் விட்டுட்டு சாப்பிடுறது எனக்கு என்னமோ மாதிரியிருக்கு.

“அதுக்கு என்ன பண்ண சொல்ற?”

நான் தினமும் உனக்கு சாப்பாடு கொண்டு வாரேன். நீ என் கூட சேர்ந்து சாப்பிடு” என்றபோது ஜெயபாலனுக்கு கௌரவம் தலைதூக்கியது.

“எனக்கு வேண்டாம்டா?”

ஏன்?

வேணாம்னா வேணாம் தான்.

அடம் பிடித்தவனை ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்த முத்து தன் குடும்பத்தில் கஷ்டங்கள் ஆயிரம் இருந்தாலும் அன்று முதல் ஜெயபாலுக்கும் சேர்ந்தே மதிய உணவு கொண்டு வந்தான்.

“டேய் ஜெயபால் சாப்பிடுவமா?

“ஓ .. சாப்பிடலாமே என்று ஜெயபால் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

ஒரு நாள் இரண்டு நாள் என்று இப்படி சாப்பிடும் போது இது யாருக்கும் பெரியதாக தெரியவில்லை.

ஆனால் தினமும் நண்பர்களுக்கு என்னவோ போலானது.

டேய் முத்து இது சரிபட்டு வராதுடா

“எது? ”

“நீ வேணும்னா ஜெயபாலுக்கு தினமும் சாப்பாடு கொண்டுவந்து கொடுக்கலாம்.

நாங்க தெனமும் அவனுக்கு பங்கு வைக்கணும்னு அவசியமில்லை என்று சூடான வார்த்தைகளை அள்ளி தெளித்தான் ராமன்.

டேய் அவன் பாவம்டா

வெளியூரிலிருந்து வந்து படிச்சுக்கிட்டு இருக்கான். அவனுக்குன்னு யாரும் இங்க இல்ல. நாமதான அவன் பார்க்கணும் என்று முத்து சொன்ன போது ராமன் அதை ஒத்துக் கொள்ளவில்லை.

நண்பர்களுக்கும் அப்படியே அன்று மதியம் முத்துவைத் தவிர யாரும் ஜெயபாலுடன் சேர்ந்து சாப்பிட வரவில்லை.

நாமளும் எவ்வளவு நாளைக்குடா வீட்ல இருந்து கொண்டு வாரத பகிர்ந்து குடுத்திட்டே இருக்கிறது.

நமக்கும் அது பத்த மாட்டேங்குது என்று பேசிய படியே அன்று மதியம் சாப்பிட்டனர்.

ஜெயபாலு யாரு என்ன சொன்னாலும் பரவாயில்லடா உனக்கு நானிருக்கேன் . நீ படிக்கிற நான் கடைசி வரைக்கும் நானே உனக்கு சாப்பாடு கொண்டு வந்து தாரேன். நீ சாப்பிட்டுட்டு உன்னோட படிப்ப பார்க்கலாம் என்று முத்துவின் வார்த்தைகள் ஜெயபாலுக்கு என்னவோ செய்தது.

அன்று முதல் கல்லூரியின் இறுதி நாள் வரை அவனே சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தான்.

சிறிது காலத்தில் கல்லூரி முடிந்தது. போட்டித் தேர்வுகளில் ஒன்றில் வெற்றியும் பெற்றான் ஜெயபால்.

அதற்கு நிறைய உதவிகள் செய்தான் முத்து .

அவன் பதவி பணியிடத்திற்கும் உதவி செய்தான்.

நல்ல நிலையில் அவன் வாழ்க்கை அமைந்தது.

படிப்படியாக முன்னேறினான் காலங்கள் கரைந்தன.

வீடு வாசல் என அவன் வசதியின் வட்டங்கள் விரிந்தன.

கொஞ்சங் கொஞ்சமாய் முத்துவை மறக்க ஆரம்பித்தான்.

ஜெயபால் இருவருக்குமான தொடர்புகளின் தூரங்கள் தூரமாகிக் கொண்டே சென்றன.

போன் செய்து பார்த்தும் பலனில்லை.

அவன் “ஹலோ” என்று கூட ஒற்றை வார்த்தை சொல்வதற்கும் ஒராயிரம் யோசனைகள் செய்தான்.

என்ன இவன் இவ்வளவு பிஸியாகிட்டானா?

இருக்கட்டும். நம்ம நண்பன் நல்லா இருந்தா நமக்கு தான நல்லது என்ற முத்துவின் எண்ணம் அவனைத் தவறாக நினைக்கவில்லை .அவனுக்கு ஆயிரம் கஷ்டங்கள் வந்து போயின. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரே ஒரு நாள் அவனை சந்தித்தான் முத்து

என்ன எப்படி இருக்கிற முத்து?

“இருக்கேன்”

“ம்”

ஜெயபால்,

“சொல்லுப்பா,

வீட்ல கொஞ்சம் கஷ்டம்

“ஓ” என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே உதிர்த்தான்.

ஏதாவது உதவி செய்ய முடியுமா?

என்ற முத்துவின் வார்த்தைக்கு ஜெயபால் பதில் சொல்லவில்லை.

மாறாக அவன் அருகில் வந்தான் .

முத்து நீ இப்படி இருக்காதே சுயநலத்தோடவே இரு. அப்பத்தான் நாலு காசு சம்பாதிக்க முடியும் என்று அவன் சொன்னபோது முத்துவுக்கு என்னவோ போலானது.

ஆமா முத்து நான் சொல்றது சரின்னு நீ போகப்போகத் தெரிஞ்சுக்கிருவ என்ற ஜெயபாலனின் வார்த்தை அவனை பின்னோக்கி இழுத்துச் சென்றன.

டேய் நானும் அப்படி நெனைச்சிருந்தா நீ காலேஜ் படிக்கும் போது உனக்கு மதிய சாப்பாடு கெடைச்சிருக்குமா ? இந்த நிலைமைக்கு வந்திருவியா? இப்ப நீ நல்லா இருக்கேன்னு தான இப்படி பேசுற என்று முத்து ஜெயபாலை நினைத்து வருத்தப் பட்டான்.

” தன் முன் நிலையை மறப்பவன் மூடன்….’’

ச்சே …. மனிதர்களின் மனங்கள் இப்படித்தான் போல என்று நொந்தான் முத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *