வாலாஜா, செப் 10
வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர சுவாமிகளின் 65 வது ஜெயந்தி விழா, நூதன 5 நிலைராஜகோபுரம் மற்றும் குபேர ராஜகணபதி ஆலய கும்பாபிஷேக விழா ஆகியவை அடங்கிய முப்பெரும் விழா வருகிற 13–ந் தேதி தொடங்கி 15ம்தேதி முடிய நடைபெறுகிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 6ம்தேதி காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது .நிகழ்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள சப்த மாதா, நவகன்னிகள்,முனீஸ்வரர் கிராம தேவதை,எல்லை தேவதை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளுடன், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. மேலும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நவக்கலச திருமஞ்சனமும் ,சகல தேவதா ஹோமமும் ஆகியவை நடத்தப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. முப்பெரும் விழா வருகிற 13-ம் தேதி அன்று யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெறுகிறது. 14ம் தேதி அன்று முரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15 ம் தேதிஅன்று முப்பெரும் விழாவில் முக்கிய நிகழ்வான 59 அடி உயர ஐந்துநிலை ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், சனீஸ்வரர் ஆலயம் ,குபேர ராஜ கணபதி ஆலயங்கள் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது .
கும்பாபிஷேக விழாவில் 40க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் ,ஆன்மீக பெரியோர்கள் , முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள், பல்வேறு கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தன்வந்திரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.