சிறுகதை

தன்மானம் – ராஜா செல்லமுத்து

கோடம்பாக்கத்தில் இருந்து எக்மோர் வரை தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்து அலுவலகத்திற்குச் செல்லும் செல்வராஜுக்கு மின்சார ரயிலில் நடக்கும் விஷயங்கள் எல்லாம் அத்துபடி. ஆனால் ஒருபோதும் ரயிலில் வரும் பயணிகளுக்கு அவர் எந்தத் தொந்தரவும் செய்ததில்லை .அவர் உண்டு அவர் வேலை உண்டு ; பயமற்ற பயணம் உண்டு என்று செல்வார்.

தினமும் ரயிலில் பயணம் செய்வதால் சில பல முகங்களை பார்த்து சிரிப்பார் ; அதோடு சரி. தவறியும் பேசியதில்லை. அதே நேரத்தில் அந்த ரயிலில் பயணம் செய்து வரும் மனிதர்கள் சில பேர் அவருக்கு முதலில் அறிமுகமானார்கள். பின்பு நன்றாகப் பேசினார்கள். பின் நண்பரானார்கள் ; கோடம்பாக்கத்தில் இருந்து எக்மோர் வரை அவருக்கு அந்த பயணம் ஒரு இனிப்பைத் தந்தது. ஒரு நிறுத்தத்தில் இறங்கி மறு நிறுத்தத்தில் யார் என்று தெரியாமல் போகும் ரயில் பயணத்தைப் போல இல்லாமல் தினம் தினம் அந்த ரயிலில் சில மனிதர்கள் நண்பர்களாக பேசிச் சென்றது செல்வராஜூக்கு அந்த பயணம் ஒரு சந்தோஷத்தை கொடுத்தது.

முன்னப் பின்னத் தெரியாத ஆட்கள் வந்தாலும் பேசிக் கொண்டு மொத்தமாகச் செல்லும் வழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

அடிப்படையில் மற்ற மனிதர்களை விட செல்வராஜ் கொஞ்சம் ஈரம் உள்ளவர் என்பதால் ரயிலில் பயணிக்கும் ஆதரவற்ற மனிதர்களுக்கு அவர் உதவி செய்வது வழக்கம். இதைப் பார்த்த அவரது ரயில் நண்பர்கள் கூட எளனமாக பேசுவார்கள்.

” என்ன செல்வராஜ் இவங்களெல்லாம் இன்னும் உண்மையா தான் யாசகம் கேட்டுக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறீங்களா? என்று உடன் பயணிக்கும் நண்பர்கள் கேட்க

அவங்க உண்மையா இருக்காங்களோ இல்லையோ ?அது எனக்கு தெரியாது. ஆனா அவங்ககிட்ட இல்லாம தான நம்மகிட்ட கையேந்துகிறார்கள். நீங்களும் நானும் மத்தவங்க கிட்ட கையேந்துறதுல்ல ; காரணம் நமக்கு ஒரு முறையான வேலை இருக்கு. மாத சம்பளம் இருக்கு. இவங்களுக்கு ஏதோ ஒரு வகையில இல்லாமல் இருக்கிறதுனால தான் தங்களுடைய தன்மானத்தை விட்டுட்டு இப்படி ரயிலையும் பஸ்லையும் ரோட்டுலையும் கையேந்தி கிட்டு இருக்காங்க . நாம ஒன்னும் அவங்களுக்கு குடுக்குற காசுல நம்ம சொத்து எதுவும் நஷ்டமாகப் போறதில்லை. இவ்வளவு செலவழிக்கிறோம் – அதுல ஒரு சின்னத் தொகை போகட்டுமே? என்று செல்வராஜ் யாசகம் கொடுக்கும் விசயத்தை தன் ரயில் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

செல்வராஜுகிட்ட பேசி ஜெயிக்க முடியுமா? வித்த தெரிஞ்ச ஆளாச்சே? என்று நண்பர்களுடன் பேசிக் கொண்டு செய்யும் பயணம் ஒரு விதமாகத் தினமும் போய்க் கொண்டிருக்கும்.

ரயில் பயணத்தில் ஒரு நாள் ஒரு பார்வை இழந்த தம்பதிகள் பேனா விற்றுக் கொண்டு வந்தார்கள். ரெண்டு பேனா பத்து ரூபா, பத்து ரூபா.அவர்களைப் பார்த்து செல்வராஜ் அவர்களிடம் ஒரு பாக்கெட் பேனாவை வாங்கினான் செல்வராஜ் .

உடன் இருக்கும் நண்பர்கள் எல்லாம்

பாத்தீங்களா இதுதான் ஒரு மனுஷனுக்கு அழகு யார் கிட்டயும் யாசகம் கேட்டு கெஞ்சி நிக்கிறத விட ஏதாவது ஒரு பொருளை வித்துட்டு வர்ற லாபத்தை எடுத்து சம்பாதிக்கலாம் அப்படிங்கற மனப்பான்மை எவ்வளவு பெருசு ? இவங்கள நான் மதிக்கிறேன்” என்று நண்பர்கள் ஆமோதிக்க ,அந்தப் பார்வையற்றவர்கள் கையில் பணத்தை கொடுத்தான் செல்வாராஜ்.

பணத்தை வாங்கிய அந்தப் பார்வையற்ற கணவன் நோட்டை தடவிப் பார்த்து அதை நூறு ரூபாய் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார் . பேனாக்கள் இரண்டு பாக்கெட் வாங்கியது போக மீதம் 80 ரூபாயை செல்வராஜுடம் நீட்டினார். மீதப் பணத்தை அந்தப் பார்வையற்றவரிடம் வாங்காமலே அசட்டு சிரிப்பு சிரித்த செல்வராஜ்,

‘‘எனக்கு வேண்டாம். மீதத்த நீங்களே வச்சுக்கங்க. உங்களுக்கு தான் மிச்சமெல்லாம். எனக்கு பாக்கித் தொகை வேண்டாம்” என்று சொன்னார் செல்வராஜ்

.சார் இந்த மீத தொக எங்களுக்கு வேண்டாம் . நாங்க பொருள விக்கிறோம். நீங்க பணத்தை கொடுக்கிறீீீங்க? எதுக்கு அதிகமா கொடுத்து என்ன பிச்சைக்காரரா ஆக்குறிங்களா? வேண்டாம் சார். நீங்க எவ்வளவு பணத்துக்கு பொருள் எடுத்தீங்களோ அவ்வளவு பணத்தை மட்டும் எங்களுக்கு கொடுத்தா போதும் .நாங்க பிச்சை எடுத்து வாழனும்னு நினைக்கல சார். தன்மானத்தோடு வாழனும்னு நினைக்கிறோம். அதனால தான் இன்னைக்கு பேனா விக்கிறோம் . நாளைக்கு சாக்லேட் விப்போம். ஏதோ ஒரு பொருள வித்துதான் நாங்க பொழைச்சுக்கிட்டு இருக்கோம். யார்கிட்டயும் கை நீட்டி காசு வாங்குறதில்லை சார்” என்று அந்த பார்வையற்றவர் சொன்னபோது இரண்டு இருக்கைகள் தள்ளி

“ஐயா காசு குடுங்க கண்ணு தெரியல. ஐயா காசு குடுங்க கண்ணு தெரியல” என்று கேட்டுக் கொண்டிருந்த ஒருவரின காதுகளில் அந்த பார்வையற்றவர் பேசிய பேச்சு விழுந்தது. சட்டென்று தன் பேச்சை நிறுத்திய அந்தப் பார்வையற்றவர் அடுத்த நிறுத்தத்தில் வண்டி நிற்கவும் ரயிலை விட்டு இறங்கினார். அந்த பார்வையற்றவர் தட்டுத் தடுமாறி நடந்து போய் ரயில் நிலையத்துக்கு முன் இருந்த கடையில்

பேனாக்கள் வாங்கினார் . இந்த பேனாவை எல்லாம் வித்திட்டீங்கன்னா உங்களுக்கு 200 ரூபாய் லாபம் கிடைக்கும் ” என்று அந்தக் கடைக்காரர் சொன்னது ஞாபகத்திற்கு வர, அதுவரையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பார்வையற்றவர் அவர் ஏறிய ரயில் போகவும் அடுத்த ரயிலுக்காக காத்திருந்தார்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் நடைமேடைக்கு ஒரு ரயில் வந்தது. பிறந்ததிலிருந்து யாசகம் கேட்டே வளர்ந்த அந்தப் பார்வையற்றவர் இன்று முதலீடு செய்த தன் பொருளை எடுத்துக் கொண்டு ரயிலில் ஏறினார்.

” ஐயா ரெண்டு பேனா பத்து ரூபா. ரெண்டு பேனா பத்து ரூபா. வாங்குங்க ” என்று தன்மானத்தோடு குரல் கொடுக்க ஆரம்பித்தார் அந்தப் பார்வையற்றவர்

“ரெண்டு பேனா வாங்கினால் பத்து ரூபா. ரெண்டு பேனா வாங்கினால் பத்து ரூபா” என்று தடுமாறியப்படியே ரயிலில் தன் விற்பனையை ஆரம்பித்தார்.

அப்போது மெதுவாக போய்க் கொண்டிருந்த ரயில் தற்போது வேகம் எடுத்திருந்தது.

#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *