செய்திகள்

தன்பாலின திருமணம்: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 4 மாறுபட்ட தீர்ப்பு

டெல்லி, அக். 17–

ஓரின சேர்க்கையாளர்கள் திருமண விவகாரத்தில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம்; தன்பாலின (ஓரின) சேர்க்கையாளர்கள் திருமணங்களுக்கு எதிராக நடவடிக்கை, பாகுபாடு காட்டக் கூடாது என்பது உள்ளிட்ட பல முக்கியமான கருத்துகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம் பெற்றுள்ளன.

ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ரவீந்திர பாட், நரசிம்மா, சஞ்சய் கிஷன் கவுல்,ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய அரசியல் சான பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.

மாற்றங்களை தடுக்க முடியாது

தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

நமது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்காத பல விஷயங்கள் இன்று ஏற்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது. முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட குழந்தை திருமணம், சதி உடன் கட்டை ஏறுதல் ஆகியவை இன்று நிராகரிக்கப்பட்டும் இருக்கின்றன.

தன்பாலின உறவு அல்லது ஓரின சேர்க்கை நகர்ப்புற வாழ்வியலுடன் இணைந்தது மட்டுமே என்கிற ஒன்றிய அரசின் வாதம் ஏற்புடைய வாதம் அல்ல. நகர்ப்புறவாசிகள் அனைவருமே ஒரே மேட்டுக்குடி வர்க்கம் என்ற கருத்துக்கு வர முடியாது. அதேபோல, திருமணம் ஒரு நிலையான மாறாத அமைப்பு என்பது ஏற்புடையது அல்ல. திருமண சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய திருமண சீர்திருத்தங்கள் சட்டங்கள் மூலமே மேற்கொள்ள முடியும்.

மேலும் நாடாளுமன்றத்தில் திருமண சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் கட்டாயப்படுத்த முடியாது. நீதிமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது; நாடாளுமன்றம்தான் சட்டத்தை இயற்ற வேண்டும்; திருமண சட்ட சீர்திருத்தம் குறித்து நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்.

சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அது நாட்டை விடுதலைக்கு முந்தைய காலத்துக்குதான் இழுத்து செல்லும். தன்பாலின உறவு குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு சட்டம் செல்லுமா? செல்லாதா? என்பதை ஆராயக் கூடிய அதிகாரததை நீதிமன்றத்திடம் இருந்து பிரித்து விட முடியாது.

நீதிமன்றங்கள் தலையிடும்

திருமணம் சார்ந்த தன்பாலின விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்ற ஒன்றிய அரசின் வாதம் நிராகரிக்கப்படுகிறது. திருமணம் சார்ந்த சட்டத்தின் சரத்துகளை ஆய்வுக்குட்படுத்தக் கூடியதுதான் நீதிமன்றம். குடும்ப விவகாரங்களில் நீதிமன்றங்களின் தலையீட்டை நிராகரிக்க முடியாது. இது நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது. அத்தகைய நீதிமன்ற தலையீடு இல்லாமல் போனால் பலவீனமானவர்கள் பாதிக்கப்படுவர்கள். பொதுமக்களின் அடிப்படை உரிமையை நீதிமன்றமே பாதுகாக்கும்.

திருநங்கை ஒருவரால் பாலின உறவில் இருக்க முடியும் என்கிற போது அவரது திருமணம், சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம். பாலின மாற்று சிகிச்சை, குடும்பத்துடன் சேர்ந்து வாழுதல் என்கிற நிபந்தனைகளை தன்பாலின உறவாளர்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது.

தன்பாலின ஜோடிகளுக்கு குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை உண்டு. இவர்கள் குழந்தைகளை தத்தெடுக்க கூடாது என சொல்வது பாகுபாடு காட்டுவதாகும். ஓரின சேர்க்கை ஜோடிகள் சமூகத்தில் அனைவரையும் போல சமமாக வாழ அடிப்படை உரிமை உள்ளது, யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்குதான் சுதந்திரம் இருக்கிறது என்று கூறினார்.

நீதிபதி எஸ்.கே.கவுல்

தலைமை நீதிபதிக்கு பிறகு நீதிபதி எஸ்.கே.கவுல் தீர்ப்பளித்தார். அப்போது அவர் தன் பாலினத்தனவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சரி செய்ய இதுவே சரியான தருணம் என்றார். தற்போதுள்ள சட்டங்கள் ஆங்காங்கே தனித்தனியாக உள்ளன என்று கூறிய நீதிபதி எஸ்.கே.கவுல், புதிதாக உருவாக்கப்பட வேண்டிய ஒருங்கிணைந்த சட்டம் பாகுபாடு பாலின அடையாளங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கையாளும் வகையில் இருக்க வேண்டும் என்றார். தன் பாலின திருமணங்களை அங்கீகரிப்பது என்பது ஒரு முன்னோக்கிய நகர்வு என்று கூறிய நீதிபதி எஸ்.கே.கவுல், தன் பாலின தம்பதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, நீதிபதி ஸ்ரீபதி ரவீந்தர பாட் கூறும்போது, ஓரினசேர்க்கை கிராமம், நகரத்திற்கு சொந்தமானது அல்ல என்று தலைமை நீதிபதி சொன்னதை ஏற்றுக்கொள்கிறேன். அதே சமயம் அவர் கூறிய மற்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் நரசிம்மா & ஹீமா கோலி

இதேபோல நீதிபதி பிஎஸ் நரசிம்மா, நீதிபதி ஹீமா கோலி ஆகியோரும் தன் பாலின திருமண சட்ட அங்கீகாரத்துக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். 5 நீதிபதிகளில் மூன்று பேர் தன் பாலின திருமணங்களுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். இதையடுத்து இவ்வழக்கில் இறுதி தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், மாறுபட்ட தீர்ப்புக்களின் அடிப்படையில் தன் பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று கூறினார்.

அதே நேரத்தில் தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக ஒன்றிய அரசு உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *