ராய்ப்பூர், நவ. 2–
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் எட்டு வயது சிறுவன் ஒருவன், தன்னை கொத்திய நாகப்பாம்பை பிடித்து கடித்ததில், நாகப்பாம்பு இறந்துள்ள வினோதம் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூருக்கு வடகிழக்கே 350 கிமீ தொலைவில் உள்ள ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில் பாஹடி கோர்வா என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் 200 வகையான பாம்புகள் காணப்படுவதால், இந்த பகுதியை உள்ளூர் மக்கள் “நாகலோகம்” (பாம்புகளின் இருப்பிடம்) என்று அழைக்கின்றனர்.
பாம்பை கடித்து கொன்ற சிறுவன்
இந்நிலையில், ஜாஷ்பூர் மாவட்டம் பந்தர்பாத் கிராமத்தில் தீபக் என்ற 8 வயது சிறுவன், தனது வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று அவனை கொத்தியுள்ளது. இதையடுத்து தன்னை கடித்த அந்த நாகப்பாம்பை சிறுவன் வளைத்துப் பிடித்து, தனது கையில் சுற்றிக் கொண்டு அந்த பாம்பை கடித்துள்ளான். இதில் அந்த நாகப்பாம்பு இறந்துள்ள வினோதம் நடந்துள்ளது.
இதையடுத்து பயந்து போன அவரது குடும்பத்தினர் அந்த சிறுவனை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். தன்னை கடித்த பாம்பை சிறுவன் கடித்தான் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடனடியாக ” சிறுவனுக்கு பாம்பு விஷம் முறிவு ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர். பின்னர் நாள் முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தற்போது சிறுவன் பூர்ண நலமாக இருப்பதை அடுத்து வீட்டு அனுப்பப்பட்டதாக” மருத்துவ அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், “பாம்பு என் கையை கடித்தது. நான் மிகுந்த வலி வேதனையில் இருந்தேன். பின்னர் என்னை கடித்த அந்த பாம்பை வளைத்துப் பிடித்து கையில் சுற்றிக்கொண்டு இரண்டு முறை கடித்தேன். இது அனைத்தும் ஒரு நொடியில் நடந்தது என்று கூறி உள்ளான்.