செய்திகள்

தன்னைக் கொல்ல திரிணாமுல் சதி: பாஜக துணை தலைவர் குற்றச்சாட்டு

கொல்கத்தா, செப். 28–

தன்னைக் கொல்ல திரிணாமுல் காங்கிரஸ் சதி செய்கிறது என்று, பாஜக தேசிய துணை தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக மீண்டும் மம்தா பானர்ஜி பதவியேற்று கொண்டார். எனினும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி கண்டார்.

இதனால், 6 மாதங்களுங்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் மம்தா போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை முன்னிட்டு பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சோபன்தேப் ராஜினாமா செய்தார். காலியான அந்த தொகுதிக்கு 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பவானிபூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, முதலமைச்சர் மம்தா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பிரச்சாரத்தில் தள்ளுமுள்ளு

அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று மாலை நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக தேசிய துணை தலைவர் திலீப் கோஷிற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கு இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், என்னைக் கொல்ல திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த குண்டர்கள் மற்றும் ரவுடிகள் திட்டமிட்டடு உள்ளனர். ஆளுங்கட்சியின் தீங்கு விளைவிக்கும் இயல்பு இதன்வழியே வெளிப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்பு, நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படுமா? என்றும் கோஷ் டுவிட்டரில் கேட்டுள்ளார்.

எனினும், திலீப் கோஷின் உதவியாளர் துப்பாக்கிகளை வைத்துள்ளார் என திரிணாமுல் காங்கிரசார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கூட்டத்தினரை மிரட்டுவதற்காக கோஷின் தனி பாதுகாவலர் துப்பாக்கிகளை உபயோகித்து உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *