சிறுகதை

தன்னிச்சை முடிவு |மு.வெ.சம்பத்

ரெங்கன், ராமாயிக்கு இரன்டு மகன்கள். விவசாயமே இவர்களது பிரதான தொழில். மேற்படிப்புக்காக முதல் மகனை சிங்கப்பூர் அனுப்பி படிக்க வைத்தார். அவன் படிப்பு முடிந்து அங்கேயே ஒரு வேலையில் சேர்ந்தான்.

தனது சேமிப்பை பயன்படுத்தி முதல் மகன் படிப்பிற்குச் செலவு செய்தார்கள். அவன் சில நாட்களுக்குப் பின் தனக்கு விருப்பமான அங்குள்ள ஒரு பெண்ணை தன்னிச்சையாகத் திருமணம் செய்து கொண்டான் என்று அறிந்த ரெங்கன், ராமாயிக்கு வருத்தமாக இருந்தாலும் ஏதும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டனர்.

அடுத்த மகனை மேற்படிப்பிற்காக தனது உறவினர் கந்தசாமியிடம் கை மாத்தாக குறைந்த வட்டியில் பணம் பெற்று சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார்கள். அவனும் அங்கு சென்று நல்ல முறையில் படித்து நல்ல கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான்.

ரெங்கனுக்கு இனிமேல் மகன் அனுப்பும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்து விடலாமென என நம்பிக்கை பிறந்தது. ஆனால் நாட்கள் தான் கடந்ததே ஒழிய, பணம் வந்த பாடில்லை. இரண்டாவது மகன் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற ஒரு வார்த்தையுடன் நிறுத்திக் கொள்வது வாடிக்கையாகிப் போனது. ரெங்கன் கந்தசாமியிடம் தவறாமல் வட்டி செலுத்தி வந்தார்.

அன்று வந்த கந்தசாமி ரெங்கனிடம் இரண்டு மகன்களும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனரே, இன்னும் எத்தனை காலத்திற்கு வட்டியே கட்டிக் கொண்டிருப்பீர், யோசியுங்கள். எனக்கு இப்போது பண முடையில்லை. அதனால் நான் உங்களை அவசரப்படுத்த மாட்டேன் என்று கூறி விடை பெற்றார்.

எருதின் புண் காக்கைக்கு தெரியாது என்பது போல் ரெங்கனின் நிலைமை கந்தசாமிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதற்கிடையில் ஐந்து நாள் பயணமாக வந்த இரண்டாவது மகன் தந்தையிடம் எப்போதும் சொல்லுவது போல் கடனைப் பற்றிக் கவலைப் படாதே என்று சொன்னதும் இதை நீ நேரே சென்று கந்தசாமியிடம் கூறு என்று ரெங்கன் கூறியதற்கு இன்று அவரை சந்திக்கிறேன் என்று சொன்னான். அதற்குப் பின் புறப்படும் வரை இந்த கடன் சங்கதி பற்றி பேசாமலேயே பயணம் மேற்கொண்டான்.

அன்று இரவு ரெங்கன் ராமாயிடம் வா நாளைக்கு உங்கள் ஊர் சென்று உங்கள் தந்தையை சந்தித்து அவர் உன் பெயரில் போட்டு வைத்துள்ள பணத்தைக் கேட்டு வாங்கி கந்தசாமியின் கடனை அடைத்து விடலாம் ஏனென்றால் வட்டியே எவ்வளவு நாட்கள் தான் கட்டுவது எனக் கூற ராமாயி உடனே சரி வாங்க போய் அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்றாள்.

மறுநாள் காலை உணவு அருந்திவிட்டு இருவரும் பயணம் மேற்கொண்டனர். காலை 11 மணியளவில் மாமனார் வீடு சென்றதும் இவர்களை அன்புடன் வரவேற்ற மாமியாரிடம் மாமா எங்கே கேட்டதற்கு அவர் 12 மணிக்கு வருவாரெனக் கூற, ரெங்கனுக்கு தான் வந்த காரியம் நடக்குமான என சந்தேகம் வந்தது.

மதியம் 12.30 மணிக்கு வந்த மாமனார் வாங்க.., இப்போதாவது எங்கள் ஞாபகம் வந்ததா என்று கூறி வாங்க சாப்பிடலாமென அழைத்தார்.

மதியம் மூன்று மணியளவில் ரெங்கனை அழைத்து மாமனார் ஒரு கடிதத்தை கொடுத்தார்.

ரெங்கனது இரண்டாவது பையன் தாத்தாவிற்கு எழுதிய கடிதத்தில் தான் கந்தசாமியின் மகளை விரும்புவதாகவும் திருமணத்தை தாத்தா நீங்கள் தான் முன்னிற்று நடத்தித் தர வேண்டுமென எழுதியிருந்தான்.

மேலும் கந்தசாமி இன்று காலை இங்கு வந்திருந்தான், இந்த சம்பந்தம் பற்றி என்னிடம் பேசினான். அவனும் நீங்கள் தான் முன்னிற்று நடத்தித் தர வேண்டுமென கேட்டுக்கொண்டான். அவன் பெண்ணிற்கும் இதில் சம்மதம் என்றான்.

நான் அந்த கடன் விவகாரம் பற்றிக் கேட்டதில் அவன் நீ கொடுத்த வட்டியை எல்லாம் அசலில் கழித்துக் கொண்டு மீதித் தொகையைக் கூற, நான் அதை பைசல் செய்து விட்டேன் என்றார்.

இதற்கப்புறம் ரெங்கனிடம் இந்த திருமண விவரம் பற்றி ஏதாவது தெரியுமா என வினவினார்.

ரெங்கன் இதுவும் அவன் தன்னிச்சையாக எடுத்த முடிவு தான் என்று கனத்த மனதுடன் கூற மாமனார் எல்லாம் நன்மைக்கே என்றார்.

ரெங்கன் கடனடைந்த மகிழ்வை உணர முடியாமல் தவித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *