சென்னை, ஜூன்.8-
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு ரூ.24 ஆயிரம் கோடியில் பாலம் கட்டும் இந்தியாவின் திட்டத்துக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவு – இலங்கை மக்களும் நீண்ட காலமாக பல்வேறு காரணங்களுக்காக இருநாடுகளுக்கும் அடிக்கடி வந்து செல்வது உண்டு. இதற்கு அன்றைய காலத்தில் கடல் மார்க்கம் மட்டுமே சாத்தியமாகி இருந்தது. தற்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் மற்றும் விமான போக்குவரத்து உள்ளன. கப்பல் போக்குவரத்து நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு 4 மணி நேரத்தில் செல்ல முடிகிறது. அதேபோல் மதுரையில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் விமானம் மூலம் இலங்கைக்கு செல்ல முடியும்.
இருப்பினும் சாலை மார்க்கமாக, இந்தியாவுடன் இலங்கையை இணைக்க மத்திய அரசு கடலில் மிக பிரமாண்ட மேம்பாலம் கட்ட திட்டமிட்டது. அதாவது தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை கடலில் சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரே சேர சாலை மற்றும் ரெயில் மேம்பாலங்கள் அமைக்க விரும்பியது. இந்த திட்டத்திற்கான அடித்தளம் கடந்த 2000-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தொடங்கியது. அதற்கு இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் ஆதரவு தெரிவித்தார்.
அந்த அடிப்படையில் இரு நாடுகள் சார்பில் இந்த மேம்பாலம் கட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
அதன்பின் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் சூழல் காரணமாக இந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. ஆனால் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பாலம் கட்டும் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி ஆர்வம் காட்டினார்.
இந்த திட்டத்தை செயல்படுத்து வதற்கான சாத்தியக்கூறுகள் மீண்டும் அலசி ஆராயப்பட்டன. அதன்படி ராமர்-சேது பாலத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த உறுதியான முடிவெடுத்தது.
அதன்படி ரூ.24 ஆயிரம் கோடியில் புதிய மேம்பாலம் திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முழு நிதி உதவியையும் வழங்குவதாக ஆசிய வளர்ச்சி வங்கியும் உறுதி அளித்தது. எனவே முழு திட்டத்தையும் இந்தியா நிறைவேற்றும் என்றும், அதற்கு ஒரு ரூபாய் கூட இலங்கை அரசு செலவு செய்ய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
எல்லாம் கைகூடி வந்த நேரத்தில் இலங்கையில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமாரா திசாநாயகா பதவி ஏற்றார். அவருடன் நடந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி, பாலம் கட்டும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அந்த அடிப்படையில் இலங்கை அரசு, இந்த திட்டத்தால் இலங்கைக்கு என்ன பலன்?, இந்தியாவிற்கு என்ன லாபம் கிடைக்கும்? என்று அறிக்கை ஒன்றையும் தயாரித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், “எந்த காலத்திலும், இந்த மேம்பாலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம்” என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த முடிவு, அதிபர் அனுரா குமாரா திசாநாயகாவின் தலைமையிலான புதிய அரசின் வெளிநாட்டு கொள்கையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இலங்கை, இந்தியாவின் துணை ஆட்சியாக மாறிவிடக்கூடாது என்பதுதான் இந்த திட்டத்தை மறுத்ததற்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
![]()





