செய்திகள்

தனி நபர் தொழில் துவங்க ரூ. 13.66 கோடி கொரோனா சிறப்பு நிதி உதவி

ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ்

தனி நபர் தொழில் துவங்க ரூ. 13.66 கோடி கொரோனா சிறப்பு நிதி உதவி

திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார்

திருவள்ளூர், ஜூன் 30–

திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் கோவிட்- 19 சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டத்தின் கீழ் 8901 தனி நபர் தொழில் முனைவோர்களுக்கு ரூ. 13.66 கோடி நிதி உதவித் தொகுப்பினை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோர்கள், வௌிநாடுகள், வௌிமாநிலம் மற்றும் வௌி மாவட்டங்களிலிருந்து திரும்பிய புலம் பெயர்ந்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்கள் ஆகியோர்களின் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் புத்துயிர் பெறும் நோக்கில் கோவிட்-19 சிறப்பு நிதி உதவித் தொகுப்பு ஆகியவைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு 28.05.2020 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு தனித்தவம் வாய்ந்த திட்டமாகும். இத்திட்டம் திருவள்ளுர் மாவட்டத்தில் மீஞ்சுர், சோழவரம், கும்மிடிபுண்டி மற்றும் கடம்பத்தூர் ஆகிய நான்கு வட்டாரங்களில் செயல்பட்டுவருகிறது.

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில், ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் மூலம் தொழில் முனைகின்ற சுய உதவி குழு உறுப்பினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வௌிநாடுகள், வௌிமாநிலம் மற்றும் வௌிமாவட்டங்களிலிருந்து திரும்பிய புலம் பெயர்ந்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்கள் ஆகியோர் சுயதொழில் துவங்க, 8901 பயனாளிகளுக்கு, ரூ.13.66 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு நிதி உதவிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

இதுதொடர்பாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது:

நீண்டகால தனிநபர் தொழில் கடனாக நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வீதம் 1584 நபர்களுக்கு 7.92 கோடி ரூபாய் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் கடனாக வழங்கப்படும். ஒரு முறை மூலதன நிதியாக உற்பத்தியாளர் குழு ஒன்றுக்கு ரூபாய் 1.50 இலட்சம் வீதம் 79 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூபாய் 1.18 கோடி ரூபாய் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். ஒரு முறை மூலதன நிதியாக தொழில் குழு ஒன்றுக்கு ரூபாய் 1.50 இலட்சம் வீதம் 8 தொழில் குழுக்களுக்கு ரூபாய் 12.00 இலட்சம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் 40 குடும்பங்கள் பயன்பெறும். நீண்ட கால கடனாக வௌிநாடுகள், வௌிமாநிலம் மற்றும் வௌிமாவட்டங்களிலிருந்து திரும்பிய புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த திறன் பெற்றவர்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 1 லட்சம் வீதம் 167 நபர்களுக்கு ரூபாய் 1.67 கோடி கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் கடனாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, மாவட்ட செயல் அலுவலர் தினகர்ராஜ்குமார், செயல் அலுவலர்கள் எம்.வரதராஜன், எஸ்.முத்துராஜா. வட்டார அணித் தலைவர்கள் மற்றும் திட்ட செயலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *