சிறுகதை

தனி ஒருத்தியாய் நின்று வளர்த்தவள்! – ரா.இரவிக்குமார்

“ஏங்க… பாப்கான் வாங்குவோமா?” என்று மனைவி லதா கேட்க…

இருநூறு ரூபாய் கொடுத்து அந்த அதிநவீன திரையரங்கில் படத்தின் இடைவேளையின்போது வாங்கிக் கொடுத்தான் சுகுமார். படத்திற்கான டிக்கெட் அங்கே வருவதற்கான டாக்ஸி கட்டணம் எல்லாம் எண்ணூறு ரூபாயைத் தொட்டிருந்தது. படம் முடிந்தபின் ஓட்டலில் டின்னர் சாப்பிட்டுவிட்டு வீடு போக முடிவு பண்ணியிருந்தார்கள்.

எப்போதும் போல் டூவீலரில்லாமல் போக வர ஏ.சி.டாக்ஸியில் பயணம், ஓட்டலில் குளு குளு அறையில் டின்னர் சாப்பிடுவது என அவற்றால் செலவு அதிகமானாலும் வாழ்க்கையை அனுபவிக்கத் திட்டமிட்டிருந்தார்கள். போரடித்த வாழ்க்கையில் ஃபன்னும் சேஞ்சும் முக்கியம் என்பது அவர்களின் கருத்து.

“லதா, அம்மாவுக்கு லைட்டா ஏதாவது டிபன் வாங்கலாமா?” என்று ஓட்டலில் கேட்டவனிடம் ‘வீட்டிலிருக்கும் இட்லி மாவு வீணாயிடும்!’ என்ற அவளின் சிக்கன நடவடிக்கை அவனுக்குப் பிடித்திருந்தது.

இரவு பதினொன்றரை மணிக்கு மேல் வீட்டை அடைந்தவுடன் அம்மா கேட்டாள்,

“ஏண்டா இவ்வளவு லேட்டு… டாக்டரைப் பார்க்க நிறையக் கூட்டம் இருந்துச்சா?”

“ஆமாம்மா… அவளுக்கு வெறும் அஜீரணம்னு டாக்டர் சொன்னாரு!”

“கவலை விட்டுச்சுடா! எனக்கு மாத்திரை வாங்கினியா?”

“அம்மா, கையில காசு கொஞ்சமா இருந்துச்சு… டாக்டர் அவளப் பார்த்துக்க அது சரியாயிடுச்சு!”

“பரவாயில்லடா!” என்ற அம்மா அவனிடம் தன் முந்தானையில் முடிஞ்சு வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டு ஒன்றை வெளியில் எடுத்து நீட்டினாள்.

“வச்சுக்கடா இத கையில… காசில்லைன்னு சொல்றியே!”

“எப்படியம்மா இது?”என்று அவன் கேட்க…

உள்ளறையில் ஆடை மாற்றிக் கொண்ட பின் அங்கு வந்த லதா அதைப் பார்த்தவுடன் கேட்டாள்,

“அத்தை, கீழேயிருந்து எடுத்தீங்களா? இததான் நான் தேடிட்டு இருந்தேன்!”

“இல்லம்மா, இது பக்கத்து வீட்டு மாமி குடுத்தது! நீங்க வெளியே போயிருந்தபோது பக்கத்து வீட்டு மாமிக்குக் கீழே விழுந்து கால் சுளுக்கிட்டுது. அவங்க கால் நரம்ப நீவி விட்டுச் சுளுக்கெடுத்தேன். வலி போய்ச் சுகமானதால அவங்க சந்தோஷப்பட்டு இதக் குடுத்தாங்க! உனக்கு உதவாத பணம் எனக்கு எதுக்குடா?”

“அம்மா!” என்று குரல் தழுதழுத்தவனிடம்

“டேய், உனக்கு ஞாபகம் இருக்கா? உன் சின்ன வயசில அப்பா போன பின் நீ ஒரு தடவை சினிமாவுக்குக் கூட்டிட்டுப் போன்னு பிடிவாதம் பிடிச்சே! அப்பா இறந்து ஒரு வருஷம் கூட முடியாததால என்னால் உன்னை எங்கேயும் கூட்டிட்டுப் போக முடியாத நிலைமை. எதிர் வீட்டு கார் டிரைவர்கிட்ட உன்னைக் கூட்டிட்டுப் போகக் கெஞ்சிக் கூத்தாடி அவனுக்கும் கைச் செலவுக்குக் காசு கொடுத்து சினிமாவுக்கு அனுப்பி வச்சேன். கடன்காரன் அவன் உன்னைச் சரியாகக் கவனிக்காமல் தியேட்டரில் நீ கீழே விழுந்து கால் சுளுக்கிட்டு அழுதுட்டே வந்தே! அப்பவும் நான்தான் சுளுக்கெடுத்தேன்!” – அம்மாவின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாகக் கொட்டியது.

அப்பா இறந்த பின் அம்மாவின் பராமரிப்பில் தான் வளர்ந்தது அவன் கண் முன்னே விரிந்தது. சிங்கிள் பேரண்ட் என்பது அத்தனை சுலபமல்ல! அம்மா எவ்வளவு பாடுபட்டிருப்பாள் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். சின்ன வயதில் தனக்கு ஒரு கஷ்டமும் தெரியாமல் வளர்த்த அவள் எங்கே தான் எங்கே என்ற எண்ணம் அவனுக்கு உண்டாக அவன் கண்கள் பனித்தன!

ஓடிப்போய் அம்மாவுக்கு மாத்திரை வாங்கிவந்து கொடுத்தான்.

இனி அம்மாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *