சிறுகதை

தனியாவர்த்தனம் | ராஜா செல்லமுத்து

Spread the love

‘‘ ஏன்..? இந்த மனுசங்க இப்பிடி இருக்காங்க.. ஆளுக்கொரு குணம், ஆளுக்கொரு செய்கை, ஆளுக்கொரு வேசம், அப்பப்பா..! இந்த மனுசப்பிறவி எடுத்தது போதும். நாம இஷ்டத்துக்கு வாழ முடியாது போல.. அடுத்தவங்களோட எண்ணத்துக்கு தகுந்த மாதிரி தான் நாம வாழ முடியும் போல. இதுயென்ன இப்பிடியொரு ஒட்டுண்ணி வாழ்க்கை..’’யென்று சலித்துக்கொண்டான் சங்கர்.

அவன் பேச்சை அப்படியே அடிபிறழாமல் கேட்டுக்கொண்டிருந்த சரவணன் சட்டென அவனை ஏறிட்டுப்பார்த்தான்.

‘‘என்ன சங்கர்.. தத்துவ முத்துக்கள எறச்சு விட்டுட்டு இருக்க போல..’’ என்று அவனின் வார்த்தைக்கு அடி முலாம் பூசியபடியே வந்தவனை

‘‘இல்ல சரவணன்.. இந்த மனுச வாழ்க்கை ரொம்ப போரடிச்சுப்போச்சு.. எல்லாம் அவங்கவங்க இட்ட கட்டளைப்படி கட்டுப்பட்டுத்தான் நடக்கணும்னு நினைக்கிறாங்க..’’ என்று சங்கர் சொல்லும் போதே அவன் வார்த்தைகளில் விரக்தி தொக்கி நின்றது.

‘‘எதுவும் புரியும்படியா சொல்லு சங்கர்..’’ என்று சரவணன் கேட்டான்.

‘‘ஒன்னுல்ல சரவணன்.. நம்ம ஆபிஸூக்கு வருசா வருசம் பெயிண்ட் அடிப்பாங்கள்ல..?’’

‘‘ஆமா.. அதுக்கென்ன இப்போ..?’’ என்று சரவணன் நீட்டினான்.

‘‘நீ ..எதையும் பெருசாவே எடுக்க மாட்ட.. அதான் உன்கிட்ட எதையும் நான் சொல்றதில்ல..’’ என்று சங்கர் பேச்சைக்குறைத்தான்.

‘‘இங்க பாரு சங்கர்..அந்த மீட்டிங்கில நானும் தான் இருந்தேன். ஆளுக்கொரு கலர சொல்லிட்டுத்தான் இருந்தாங்க.. நானும் கேட்டுட்டு தான் இருந்தேன். நான் ஏதாவது வாயத்திறந்தனா..!

‘‘ம்..’’

‘‘ஆனா..நீ.. தான் வளவளன்னு பேசிட்டே இருந்த. இங்க.. பாரு சங்கர். நாம சொல்றத எங்க , யாரு கேக்குறாங்களோ..? அங்க தான் பேசணும்.. நம்ம பேச்ச கேக்காத எந்த எடத்திலயும் வாயத்தெறக்கக் கூடாது. இல்ல.. உன்னோட சொல்ல அடுத்தவங்க தட்ட முடியாதுங்கிற ஆளுமைய வளத்திட்டுப் பேசு. அத விட்டுட்டு, பேசணும்றதுக்காக பேசி, ஏன் இப்பிடி ஒன்னோட எனர்ஜிய வீணாக்குற..?’’ என்று சரவணன் சொன்னான்.

‘‘இல்ல சரவணன் எப்பவுமே வழக்கமா நம்ம ஆபீசுக்கு வெள்ளை பெயிண்டு தானே அடிப்பாங்க..!

‘‘ஆமா..’’

‘‘புதுசா வந்த ஒருத்தர் மஞ்ச பெயிண்டு அடிங்க நல்லா இருக்கும்னு சொல்றாரு.. அதுக்கு மொத்த கூட்டமும் ஆமா சாமி போடுறாங்க, அதான் எனக்கு கோபம் வந்திருச்சு – அதான் அப்பிடிப்பேசுனேன். எப்பவுமே அடிக்கிற வெள்ளை பெயிண்டவே அடிங்க அதான் நமக்கும் நல்லது. ஆபீசுக்கும் நல்லதுன்னு சொன்னேன். ஒரு சில பேரு ஆமா, அவரு சொல்றதும் சரிதான். யாரும் பழச மறக்கக் கூடாதுங்க. வெள்ளை தானே நம்மோட அடையாளம் -மார்க்கெட்ல புதுசு புதுசா பெயிண்டு வரும், சுண்ணாம்பு வரும், கலர்பொடி வரும், அதுக்காக அத்தனையும் அள்ளி மூஞ்சியில தேச்சிட்டு இருக்கக் கூடாது.. நம்ம கட்டடத்துக்குன்னு ஒரு பேர் இருக்கு வெள்ளப்பெயிண்ட பாத்தே.. நம்ம ஆபீசோட அங்கீகாரத்த தெரிஞ்சுட்டு இருந்த வங்க கிட்ட திடீர்ன்னு பெயிண்ட மாத்துனா நல்லா இருக்காதுன்னு சொன்னேன். அதுக்கும் சில பேரு ஆமாங்கிறாங்க.. சில பேரு இல்லங்கிறாங்க.. அதான் நான் கூட்டத்த விட்டு எந்திருச்சு வந்திட்டேன்..’’ என்றான் சங்கர் .

‘‘இங்க பாரு..சங்கர் கூட்டத்தோட கூட்டமா வாழறது தான் நமக்கு நல்லது. இங்க நாம இஷ்டப்பட்ட படியெல்லாம் வாழ முடியாது. ஏன்..? நம்ம காரு, நம்ம வண்டிய எடுத்திட்டு நம்ம இஷ்டத்துக்கு ரோட்டுல கூட ஓட்டிட்டு போக முடியாது. அடுத்தவங்க ஓட்டிட்டு போற வேகத்துக்கும் அவங்க ஸ்டைலுக்கும் தகுந்த மாதிரி தான், நாம வண்டி ஓட்டணும். இல்ல..! எங்கயாவது முட்டி நிக்க வேண்டியது தான். இதப்புரிஞ்சுக்கிட்டயின்னா..! ஒன்னோட வண்டி ஓடும் – இல்ல.. நீ காலம் முழுசும் யார் கிட்டயாவது சண்ட போட்டுட்டே இருக்க வேண்டியது தான்..’’ என்று சரவணன் சொன்னான்.

‘‘இல்ல சரவணன்..இங்க எல்லாமே முரண்பாடா இருக்கு.. அதான் எனக்கு கோவம் வருது..’’ என்றான் சங்கர்.

‘‘ஆமா.. இங்க எல்லாமே அப்பிடித்தான் இருப்பாங்க.. உன்னோட எண்ணத்த, உன்னோடயே வச்சுக்க. நீ.. சொன்னா..! அத கேக்குற ஆள் கிட்ட சொல்லு. கேக்கலயா விட்டுரு..’’ என்று சரவணன் சொல்ல அவன் சொல்லும் உடன்படிக்கை சங்கருக்கு உடன் படவே இல்லை.

‘‘சரி விடு..’’ என்று அரை மனதாகவே சொன்னான் சங்கர்.

அன்று முழுவதும் அவன் மனது அவனிடம் இல்லவே இல்லை. அலுவலகம் முடித்து சோர்ந்து போய் வீடு திரும்பினான் சங்கர்.

‘‘என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க..’’ என்று கேட்டபடியே சங்கரின் மனைவி சங்கீதா அவனின் தலைகோதினாள்.

‘‘இல்ல.. ஒன்னுல்ல..’’ என்றபடியே சோபாவில் அமர்ந்து ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்தான். ஏதோ ஒரு படம் ஓட அதைக் கொஞ்சங்கூட லயிக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.

‘‘ஏங்க காபி போடவா..?’’ சங்கீதா கேட்டாள்.

‘‘ம்..’’ என்ற பதிலை ஒற்றை வார்த்தையில் சுருக்கிக் கொண்டான் சங்கர்.

சங்கீதா காபி கொண்டு வருவதற்குள் சங்கர் பார்த்துக் கொண்டிருந்த சேனலை மாற்றி மாற்றிப்போட்டு சண்டை இட்டுக் கொண்டிருந்தனர் அவனின் இரண்டு பிள்ளைகள். ரிமோட்டை எடுத்துப்பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

‘‘ஏய் சன் டிவி வையிடி..’’ என்று சங்கரின் மூத்த மகள் சொல்ல

‘‘முடியாது.. எனக்கு விஜய் டிவி தான் பிடிக்கும்..’’ என்று இளைய மகள் அடம் பிடிக்க

‘‘ஏய் ரெண்டு பேரும் ஏன் இப்பிடி சண்ட போட்டுட்டு இருக்கீங்க.. ரிமோட்ட என் கையில குடுங்க..’’ என்றபடியே காபிக் குவளையுடன் வந்த சங்கீதா, காபியை சங்கரிடம் கொடுத்து விட்டு, மகள்களிடமிருந்த ரீமோட்டை வாங்கி அவள் ஒரு சேனலை வைத்தாள்.

‘‘அம்மா.. சன் டிவி போடு..’’ என்று ஒரு மகள் சொன்னாள்.

‘‘அம்மா விஜய் டிவி போடு..’’ என்றாள் இன்னொரு மகள்.

‘‘முடியாது எனக்கு இந்த சேனல்தான் பிடிக்கும்..’’ என்று மனைவி சங்கீதா ஒரு சேனலை வைத்துப் பார்க்க வீடே களேபரம் ஆனது மாதிரி இருந்தது.

காபியை மெல்ல உறிஞ்சிய சங்கர்.

‘ஆகா என்ன இது..! என் பொண்டாட்டி, என் குழந்தைகள் இவங்களுக்குள்ள ஒரே மனநிலை இல்லையா..? இவங்க எல்லாருமே ஒவ்வொரு சிந்தனையில இருக்கும் போது, என்னோட ரத்த பந்தம் எதுவும் இல்லாத மத்தவங்களோட சிந்தனை, எண்ணத்தை நான் எப்பிடி ஒரே மாதிரி எதிர்பார்க்க முடியும் – சரவணன் சொன்னது சரிதான். அவங்க அவங்க அப்பிடி அப்பிடியே இருக்கட்டும். – யாரையும் நாம மாத்தவும் வேண்டாம் – வருத்தப்படவும் வேண்டாம். அவங்கவங்க வழித்தடத்தில வாழ்க்கை போகட்டும். நம்மோட எண்ணத்த நாம அப்பிடியே வச்சுக்கிருவோம் . .’என்ற சங்கர் தன் புத்தியில் அதை ஆணித்தரமாக அடித்து நிறுத்தினான்.

ஆனால்….

தனிஆவர்த்தனம் இனி வாழ்வில் எடுபடாது.

உலகத்தோடு ஒட்டிப் பழகிற மாதிரி நம்மகிட்ட இருக்கிற பிடிவாத குணங்களை மாற்றிக்கொள்வோம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அவன் புதிய மனிதனாக மாறினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *