டெல்லி, ஜன. 5–
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தனியார் வங்கிகளின் நிகர லாபம் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
கொரோனா பேரிடரிலிருந்து தொழில் துறைகள் மீண்டதால் 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடன் தேவைகள் பன்மடங்கு அதிகரித்தன. வீடு, வாகனங்கள், தனிநபர் கடன்களுக்கான தேவையும் அதிகரித்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தனியார் துறை வங்கிகள், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன் விநியோக சந்தையை விரிவுபடுத்தின.
லாபம் 25 சதம் உயர்வு
இதனால், 2022 – 2023 நிதியாண்டின் 3-ம் காலண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோடக் மகேந்திரா ஆகிய பெரும்பாலான தனியார் வங்கிகளின் நிகர லாபம் பெருமளவு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த தனியார் வங்கிகளில் நிகர லாபமும் 3-வது காலாண்டில் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தனியார் வங்கிகளின் வட்டி வருவாய் மட்டும் 24 சதம் வரை அதிகரித்திருக்கும் என்பதும் பொருளாதார வல்லூநர்களின் கணிப்பாக உள்ளது.