செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு கொரோனோ தடுப்பூசி

புதுடெல்லி, பிப்.28-

தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி ஒரு ‘டோஸ்’ 250 ரூபாய்க்கு போட, மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 24-ந் தேதியன்று, பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தடுப்பூசி திட்டத்தின் 2 வது கட்டத்தை நாளை தொடங்குவது எனவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட வியாதிகளுடன் போராடும் 45 59 வயதானவர்களுக்கும் தடுப்பூசி போடுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தடுப்பூசிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடனும், தனியார் மருத்துவமனைகளுடனும் கலந்து ஆலோசித்து மத்திய சுகாதார அமைச்சகம் 3 அல்லது 4 நாளில் அறிவிக்கும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் தடுப்பூசி போடுவதற்கு தனியார் மருத்துவமனைகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலித்துக்கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது.

இதுபற்றி அந்த வட்டாரங்கள் கூறும்போது, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 கட்டணம் என்பது அதிகபட்ச தொகையாக இருக்கும். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.150, ரூ.100 சேவை கட்டணம். இது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிற வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *