செய்திகள்

நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் உள்பட

நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

 

புதுடெல்லி, மே.2-

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 130 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள (ஹாட்ஸ்பாட்) மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், பாதிப்பு குறைவான மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டு உள்ளன.கொரோனா பாதிப்பு, குணம் அடைந்தோர் எண்ணிக்கை போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் மாவட்டங்கள் மீண்டும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-கொரோனா பாதிப்பு எங்கெல்லாம் இரு மடங்கு ஆகி இருக்கிறது மற்றும் கண்காணிப்பு, குணம் அடைந்தோர் எண்ணிக்கை மற்றும் சோதனைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் மாவட்டங்களை சுகாதார அமைச்சகம் வாராந்திர அடிப்படையில் மீண்டும் வகைப்படுத்தி இருக்கிறது. அதன்படி 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், புனே, ஆமதாபாத் போன்ற பெரு நகரங்கள் சிவப்பு மண்டலத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.

சிவப்பு மண்டத்தில் 28 நாட்களும், ஆரஞ்சு மண்டலத்தில் தொடர்ந்து 14 நாட்களும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றால் அவை பச்சை மண்டலமாக இதுவரை வகைப்படுத்தப்படுகின்றன.தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *