செய்திகள்

தனித்துப் போட்டியிட தயங்கமாட்டோம்: பிரேமலதா

Makkal Kural Official

சென்னை, ஜூன் 11–

2026 சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று தெரிவித்துள்ளார்.

தற்போது காலியான ராஜ்யசபா எம்.பி. பதவி இடம் தே.மு.தி.க. கட்சிக்கு ஒதுக்கப்படாததால் அண்ணா தி.மு.க. கூட்டணி இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்ணா தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டணி பற்றி ஆலோசனை

இன்று முதல் வரும் 14ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கூட்டணி வாய்ப்பு, உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது, கட்சியை வலுப்படுத்துவது, தேர்தல் வியூகங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இக்கூட்டத்திற்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் நானும், விஜய பிரபாகரனும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். வரும் ஜனவரி 9ம் தேதி கடலூரில் தே.மு.தி.க. மாநாடு நடைபெறவுள்ளது. அதன்பிறகு தேர்தல் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும்.

தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிப்பதாக எடப்பாடி பழனிசாமிதான் எழுதி கையொப்பம் இட்டு கடிதம் கொடுத்தார். அந்த ஒப்பந்தத்தை அரசியல் நாகரீகம் கருதி பொதுவெளியில் காண்பிக்கவில்லை.

காலம் பதில் சொல்லும்

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட தயங்காது. தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுவது குறித்து தற்போது கூற இயலாது. நிச்சயமாக தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும். எனவே நிச்சயமாக அதற்கான சந்தர்ப்பம் வந்தால், அதற்கு நாங்கள் ஒன்றும் பயப்படக்கூடியவர்களோ, சளைக்கக் கூடியவர்களோ கிடையாது. தே.மு.தி.க. எத்தனையோ தேர்தல்களை எத்தனையோ இடைத்தேர்தல்களை தனியாகவே களம் கண்டவர்கள்.

அதனால் நாங்கள் எல்லாவற்றுக்கும் தான் ரெடியாக இருக்கிறோம். அதில் மாற்று கருத்து கிடையாது. அதனால அதற்கான நேரம் காலம் வரணும். காலம் பதில் சொல்லும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறோம் என கூறினார்.

அண்ணா தி.மு.க.வுடனான சுமூக உறவு குறித்து இப்போது எங்களால் சொல்ல முடியாது. கூட்டணி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவை.

எங்கள் கட்சியை வலுப்படுத்தில் முழு முனைப்போடு செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். கூட்டணி ஆட்சி அமைந்தால் அதை தே.மு.தி.க. வரவேற்கும்.

தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்த செல்வப்பெருந்தகை, தொல்.திருமாவளவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தே.மு.தி.க. – தி.மு.க. கூட்டணி தொடர்பாக ஸ்டாலினிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.

த.வெ.க.வுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, ”விஜய் எங்கள் வீட்டுப் பையன். விஜய்யிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ஏனெனில் நாங்கள் கட்சி தொடங்கி 20 வருடங்கள் ஆகிவிட்டது” என பதில் அளித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *