சிறுகதை

தனிக்குடித்தனம் – எம் பாலகிருஷ்ணன்

Makkal Kural Official

சந்திரன் தன் மனையுடன் தனிக்குடித்தனமாக புதிய தெருவில் உள்ள வீட்டுக்கு குடி வந்து விட்டான். அந்தத் தெருவில் அவனுக்கு தெரிந்தவர்களோ, பழக்கமானவர்களோ இல்லை.

சந்தோசமான மனநிலையில் குடி வரவில்லை, அவன். தனது தாய்த்தந்தையரிடம் சண்டை போட்டல்லவா வந்திருக்கிறான்.!

அவன் மனைவி மேகலாவை திருமணம் செய்து ஒரு குழந்தையும் உள்ளது. அவனது மனைவிக்கும் அவனது அம்மாவிற்கும் சின்ன வாக்கு வாதங்கள் முற்றி, அது பூதம் போலாய் மாறி கடைசியில் புயலாய் சீறி பிரச்சினையாகிக் குடும்பத்தைக் கீறி விட்டது!

மாமியார் மருமகள் சண்டை தெருவிற்கே தெரிந்தது கடைசியில் மேகலா கணவனிடம் போராடி “தனிக்குடித்தனமாக வந்தால் நான் உன்னிடம் இருப்பேன். இல்லையென்றால் நான் எங்கம்மா வீட்டுக்கு போவேன்” என்று சந்திரனிடம் சண்டை செய்ய அவனும் வேறு வழி இல்லாமல் தனியாக வீடு பார்த்து குடியிருக்க சம்மதம் சொல்லி உடனே தனிக்குடித்தனமாக இப்போது இந்த வீட்டில் வந்து விட்டான்!

அவனுக்கு தனிக்குடித்தனம் போக விருப்பமில்லை தான். என்ன செய்வது? தன்னுடைய அம்மாவிடம் சமரசமாக இல்லாமல் பாம்பும் கீரியுமாக சண்டை சச்சரவு போட்டதால் பெற்றத் தாயை பகைத்துக்கொண்டு வாடகை வீட்டில் குடியிருக்க வந்து விட்டான் சந்திரன்.

மூன்று வயது குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியால் மனவேதனையுடன் இதயத்தை இரும்பாக்கி வந்து விட்டான்! இதற்கு முன்பாக அவன் தன்னுடைய மனைவி மேகலாவிடம் முடிந்தவரை சொல்லியும் பார்த்தான். ஆனால், அவள் பிடிவாதமாக “உங்கம்மா என்னை எதிரியாய் நினைச்சி சின்ன சின்ன விசயங்களை பெரிய பிரச்சினையா ஆக்கி சண்டைக்கு வர்றாங்க. அவங்க இருக்குற வீட்டில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி அவனை அவசர அவசரமாய் வீடு பார்க்கச் சொல்லி தனிக்குடித்தனமாய் வந்து விட்டாள்!

அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது சந்திரனுடைய தாயும் தந்தையும் கண்கள் கலங்கினர். அவர்கள் வேண்டாம் போகாதீங்க என்றுக் கூறியும் சந்திரன் கேட்க வில்லை!

“நீங்க என் பொண்டாட்டிக்கிட்ட அனுசரிச்சி போகாம எந்த நேரமும் சண்டைகளை போட்டா நான் என்ன செய்ய முடியும்? என்றவாறே மனைவியுடன் வெளியேறிவிட்டான். அவனுக்கு ஒரு பக்கம் தன்னுடைய அம்மா அப்பாவை பிரிந்து வந்து வேதனை பட்டான்.

அவன் இப்போது சூழ்நிலை கைதியாகி விட்டானே!

அவன் நினைத்தால் தன் மனைவியை சத்தம் போட்டு நீ. எங்கம்மா அப்பாகிட்ட அனுசரித்து போறீயா இல்லையா? என்று கண்டித்து இருக்கலாம். ஆனால், அவன் மனைவி பேச்சே மந்திரம் என்றல்லவா இருந்து விட்டான்!

சந்திரன் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிபவன். முன்பெல்லாம் வாங்கும் சம்பளத்தை மனைவியிடம் கொடுக்காமல் தன் பெற்றோரிடம் கொடுத்து குடும்ப நிர்வாகத்தை பார்க்கச் சொல்வான். இது மனைவி மேகலாவிற்கு பிடிக்க வில்லை! சம்பளத்தை தம்மிடம் தராமல் அவனுடைய பெற்றோரிடம் தருகிறானே என்று ஆரம்பத்தில் மனதுக்குள் குமுறுவாள். ஆனாலும் இதை அவள் வெளிக்காட்ட வில்லை.

அவள் சில நேரங்களில் தனியே உட்கார்ந்து எதையோ பலமாக சிந்தித்துக் கொண்டிருப்பாள்! இதை சந்திரனின் தாய் கவனித்திருக்கிறாள். அதனுடைய அர்த்தத்தை இப்போது புரிந்திருப்பாள்!

ஒரு மாதம் சென்றது. சந்திரனுக்கு அன்று சம்பள நாள் வந்தது மனைவி மேகலா தன் கணவன் சந்திரனிடம், “ஏங்க இன்னிக்கு உங்களுக்கு சம்பளம் நாள். வாங்குற சம்பளத்தை ஒழுங்கா வீட்டுக்கு கொண்டு வாங்க. வீட்டு வாடகை அரிசி பருப்பு மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கணும்’ என்று அவனிடம் ஞாபகப்படுத்தினாள்.

“சரி. சம்பளத்தை வாங்கி வீட்டுக்குத் தானே கொண்டு வருவேன்! இன்னிக்கு சாய்ந்தரம் அரிசி பருப்பு வாங்குவோம்’ என்றபடி வேலைக்கு புறப்பட்டான் சந்திரன்.

அவளும். “பாத்து போயிட்டு வாங்க. இந்தாங்க மதிய சாப்பாடு பாக்ஸ் என்று கூறி சாப்பாடு கொடுத்து அனுப்பி விட்டாள். மாலை ஐந்து மணி, சந்திரன் வேலை முடிந்து நேராக சம்பளக் கவருடன் வீடு வந்து சேர்ந்தான். மேகலா, அவனுக்காகவே காத்திருந்தவள் அவனை முகமலர்ச்சியுடன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

அவன் வீட்டினுள் வந்ததும் அவனுக்கு காபி. போட்டு கொடுத்தாள். அவன் காபியை பருகி விட்டு தன்னுடைய சம்பளக் கவரை அவளிடம் கொடுக்க, அவள் மனம் பூரிப்புடன் வாங்கினாள்.

வாங்கி முடித்ததும் இருவரும் உட்கார்ந்து ஒரு மாத செலவு கணக்கைப் பற்றி பேசினர். வீட்டு வாடகை, அரிசி, பருப்பு மற்றும் இதர செலவுகளின் விபரத்தை பேசினர்.

பேசும் போது சந்திரனுக்கு தன்னுடைய தாய்த் தந்தையர் நினைவில் வரவே மனைவியிடம் “மேகலா நம்ம குடும்ப செலவு போக கொஞ்சம் பணத்தை அம்மா அப்பா செலவுகளுக்கு கொடுக்கலாமுன்னு….. எனச் சொல்ல அதற்கு மேகலா “இதோ பாருங்க நம்ம தனிக்குடித்தனம் வந்துட்டோம்; நமக்கு ஆயிரத்தெட்டு செலவுகள் இருக்கு; இப்பப் போய் அவங்களுக்கு பண உதவி செய்யலாமுன்னு சொல்றீங்க.

வயதானவர்களுக்கு என்ன செலவு வரப்போகுது? அதான் கவர்மென்ட் உதவித்தொகை கொடுக்குறாங்கல்லா அதை வச்சி அவங்க பொழைச்சிடுவாங்க’ என்றாள்.

“அதற்கு அவன், “அதுக்கில்ல மேகலா எதோ கொஞ்சம் கொடுப்போம்.

நான் சொன்னா கேளுங்க. இந்த மாசம் சம்பளத்தை வச்சி எப்படி சமாளிக்கிறதுன்னு நானே யோசிக்கிறேன். நீங்க என்னடான்னா உங்க அம்மா அப்பாவுக்கு கொடுக்கலாமுன்னு சொல்றீங்க?

முதல்ல நான் சொல்றதை கேளுங்க! அப்புறம் பார்ப்போம்’ என்று கண்டிப்புடன் பேச, அவனும் வேறு வழியில்லாமல் பேசாமல் இருந்து விட்டான்.

சரி. புறப்படுங்க கடைக்கு போவோம் வீட்டுக்கு தேவையானதை வாங்குவோம் என்றாள்.

சந்திரனும் “சரி வா போகலாம் என்று இருவரும் வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்க வீட்டை பூட்டி புறப்பட்டனர்.

ஒரு வாரம் சென்றது. சந்திரன் வேலைக்கு போய்விட்டு மாலை பதற்றத்துடன் வீட்டுக்கு வந்தான். “மேகலா என்னை எங்க கம்பெனி விசயமா வெளியூர் வேலைக்கு இன்னிக்கேபோகச் சொல்றாங்க.

நான் வர்றதுக்கு பத்து நாள் ஆகும். அதுவரைக்கும் நீ. இங்க தனியா இருக்க வேணாம் குழந்தையோட உங்கம்மா வீட்டுக்கு போயிடு. நான் பத்து நாள் வேலை முடிஞ்சி உன்னை கூப்பிட வர்றேன். வா. இப்பவே உங்க வீட்டுக்கு போவோம்; நான் உன்னை விட்டுட்டு வர்றேன்” என்று அவன் சொல்லவும்.

“அய்யையோ. எங்கப்பா அம்மா, அண்ணன் தம்பிகளோட அவங்க வெளியூர் டூருக்கு போயிட்டாங்களாம்! அவங்க வர்றதுக்கு ஒரு வாரம் ஆகுமாம் அம்மா தான் சொன்னாங்க” என்றதும் சந்திரனுக்கு கோபம் வந்தது!

“யாரை கேட்டு டூருக்கு போனாங்கலாம்? என்கிட்ட நீ சொல்லி இருக்கலாமுல்ல?

.இது என்னங்க வம்பா போச்சு? டூருக்கு அவங்க. முடிவெடுத்து போய் இருக்காங்க. இதுக்கு அவங்கல போய் எப்படி குற்றம் சொல்ல லாம்?

“அதுக்கில்ல மேகலா இப்ப வெளியூர் வேலைக்கு நான் கண்டிப்பா போய் ஆகணும்; நீ எப்படி வீட்ல தனியா இருப்பே?

அதாங்க எனக்கும் ஒண்ணும் புரியலை! நான். நம்ம வீட்டில தனியா பத்து நாள் இருத்துடுவேங்க. நீங்க தைரியமா நீங்க வேலைக்கு போங்க நான் சமாளிச்சிக்கிறேன்”

“அறிவில்லாம பேசாதே! நீ. பச்சைக் குழந்தையை விட்டு தனியா அதுவும் பழக்கமில்லாத

தெருவுல யாரோட ஆதரவுமில்லாம…. நீ மட்டும் ஒத்தையில இருக்க முடியுமா? புரிஞ்சி தான் பேசுறீயா? என்றுக் கத்தினான், சந்திரன்.

“ஏங்க நீங்க என்னங்க என் மேல கோப படுறீங்க? என்று பதில் சொல்ல அதற்கு சந்திரன், “நான் அப்பவே சொன்னேன் எங்கம்மா அப்பா வீட்டில் இருக்குறப்ப

அவசரப்பட்டு தனிக்குடித்தனமா போக வேண்டாமுன்னு சொன்னேன். நீ கேட்டியா?

இப்ப பாரு நான் வெளியூர் வேலைக்கு போறப்ப எவ்வளவு பிரச்சினையாகுதுன்னு !

உடனே மேகலா இடை மறித்து “இப்படி எங்கம்மா அப்பா திடீருன்னு டூ ருக்கு போவாங்கன்னு யார் எதிர்பார்த்தா? தன் தாய்த் தந்தையை மேகலா கடிந்து கொண்டாள். இவ்வாறு கணவனும் மனைவியும் வீட்டு வாசலில் நின்று கொண்டு, ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லிக் கொண்டு வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தனர்!

சந்திரன் ,‘‘ எனக்கு பதிலா வேற ஆளுகளும் வெளியூர் பணிக்கு போகமாட்டார்கள். இந்த தடவை நான் தான் போய் ஆக வேண்டுமுன்னு கம்பெனியிலிருந்து கண்டிப்புடன் சொல்லி விட்டாங்க; என்ன செய்றது? உன்னை யாருடைய வீட்டிலகொண்டு போய்விடுறது ?

இந்தத் தெருவுல எனக்குன்னு சொந்தக்காரங்க யாருமில்லை யாரு வீட்டுக்கும் போக முடியாது! யாரையும் எனக்குத் தெரியாது; என்னதான் செய்யுறது? என்று புலம்பும் நேரத்தில் சந்திரா என்று குரல் கேட்டது. திடீரென்று குரல் கேட்கவும் அதிர்ச்சியுடன் அவன் திரும்பி பார்த்தான், சந்திரன்!

அங்கே வெளியில் சந்திரனின் தாய் அன்னம் நின்று கொண்டிருந்தாள்! இதை இருவரும் எதிர்பார்க்கவில்லை! இருந்தாலும் அந்த நேரத்தில் தன்னுடைய அம்மாவை பார்த்ததும், “அம்மா.! என்று வாய் விட்டு சத்தம்போட்டு வேகமாக ஓடிப்போய் தாயின் கரங்களை பிடித்துக் கொண்டான்!

“நான் எல்லா விசயத்தை கேள்வி பட்டேன்டா !

நான் இருக்குறப்போ நீ ஏண்டா கலங்குறே! நீ. தாராளமாக வெளியூருக்கு போயிட்டு வாடா! நான் உன்னோட பொண்டாட்டி பிள்ளைகளை பாத்துக்கிறேன். நீ கவலை படாமா சந்தோசமா வெளியூர் வேலைக்கு எத்தனை நாளாயிருந்தாலும் போயிட்டு வாடா! என்று சந்திரனின் தாய் கூறியதும் பக்கத்திலிருந்த மேகலா உணர்ச்சி வசத்தால் கண்ணீர்த் துளிகள் கொட்டி அழ ஆரம்பித்து விட்டாள்!

“அத்தை என்னை மன்னிச்சிடுங்க.நான் உங்கள சரியா புரிஞ்சிக்காம சண்டை போட்டு கோவிச்சிட்டு வந்திட்டேன்! நீங்க அதையெல்லாம் மனசுல வக்காம எங்களை தேடி வந்திட்டீங்க அத்தை!

“உன்னை கோவிச்சிகிட்டு நான் என்ன சாதிக்கப் போறேன்? உன்னை மகளா நினைச்சி உரிமையோடு சத்தம் போட்டேன். நீ தப்பா புரிஞ்சு கிட்ட!

“அத்தை நான் தனிக்குடித்தனம் போகனுமுன்னு சொன்னது தப்புன்னு இப்ப உணர்ந்து கிட்டேன்! பெரியவங்க ஆதரவு இல்லாம வாழ முடியாதுன்னு இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன்! எல்லாரும் ஒரே குடும்பமா இருந்தா எவ்வளவு நல்லதுன்னு இப்பத்தான் புரியுது அத்தை! என்றுக் கூறியபடி மேகலா அத்தையின் கரங்களை பற்றி கண்ணீர் சிந்த அதை சந்திரனின் தாய் கண்ணீர்த் துளிகளை துடைக்க ஒரு தாயின் கரங்கள் பட்டது போல் மேகலா உணர்ந்தாள்!

மேகலா , ‘‘அத்தை எல்லாத்தையும் அள்ளுங்க. நம்ம வீட்டுக்கே போயிருவோம்’’ என்றாள்.

மகிழ்ச்சியின் உச்சிக்கே போன சந்திரன் அரை மணிநேரத்தில் வீட்டைக் காலி செய்தான்.

எல்லோரும் சொந்த வீட்டுக்கு புறப்பட்டார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *