சென்னை, ஜூலை 13–
தனது புகைபடத்தை வைத்து போலியான ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி, ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபி ரவி சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் டிஜிபி மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் முதல் காவல் ஆணையராகப் பணியாற்றியவருமான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இளைஞர்களுக்கு சமூக பொறுப்புணர்வு ஊட்டும் வகையில் தொடர்ச்சியாக பேசி வருகிறார் ரவி.
போலீசில் புகார்
இந்நிலையில், முன்னாள் டிஜிபி ரவி, சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தமது புகைப்படத்தை வைத்து போலியான முகநூல் கணக்கு தொடங்கி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக அவர் புகார் அளித்துள்ளார்.
போலி முகநூல் அக்கவுண்ட்டில் இருந்து, தான் பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், அதனை வாங்குமாறும் பரிந்துரை செய்து ஓய்வுபெற்ற டிஜிபி ரவியின் நண்பர்களுக்கு ஒரு கும்பல் மெசேஜ் அனுப்பி வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார் ரவி.
நண்பர்கள் இந்த விஷயம் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததால், அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். மோசடி கும்பல் ஓய்வுபெற்ற டிஜிபி பெயரிலேயே மோசடியில் ஈடுபட்டு வரும் இந்நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.