செய்திகள்

தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்சு; குழந்தை இறந்ததால் விபரீதம்: போலீசார் கொலை வழக்குப்பதிவு

சென்னை, மே 2–

தனக்கு தானே பிரசவம் பார்த்த நர்ஸ் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் தியாகராய நகர் சவுத்போக் பகுதியில் உடன் வேலைபார்க்கும் தோழிகளுடன் தங்கி இருந்தார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் உசிலம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் திருமணம் செய்யாமல் நெருங்கி பழகினார். இதில் நர்சு கர்ப்பமானார்.

இந்த நிலையில் 7 மாதமாக கர்ப்பிணியாக இருந்த நர்சுக்கு நேற்று முன்தினம் தங்கி உள்ள அறையில் இருந்த போது வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கழிவறைக்கு சென்ற நர்சு தனக்கு தானே பிரசவம் பார்த்தார். அப்போது குழந்தையை வெளியே எடுக்க முடியாமல் அதன் ஒரு காலை வெட்டி எடுத்தார். இதில் பெண் குழந்தை இறந்தது. நர்சின் அலறல் சத்தம் கேட்டு வந்த உடன் தங்கி இருந்த தோழிகள் குழந்தையின் உடலையும், நர்சையும் மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நர்சுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த தகவலின்படி மாம்பலம் போலீசார் நர்சு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பிரசவத்தின் போது குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால் அந்த பெண் குழந்தை இறந்து இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது. மேலும் குழந்தையை கத்தியால் வெட்டிய போது நர்சுக்கும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன.இதையடுத்து நர்சு மீது மாம்பலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து உள்ளனர். சிகிச்சை முடிந்ததும் நர்சு கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *