சிறுகதை

தனக்குனு வந்தாத்தான் தெரியும் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

அந்த மாலை வேளையில் அப்பா வருகைக்காக வாயிலில் காத்திருந்த 10 வது படிக்கும் குமாருக்கு அப்பாவின் செய்கைகள் மிகுந்த அச்சத்தை கொடுத்தது.

வீட்டு வாயிலுக்கு வந்தவர், காரை அறைந்து சாத்திவிட்டு, கடுப்பான முகத்துடன் குமார் நிற்பதையும் பார்க்காமல் விடுவிடுவென உள்ளே போனார்..

தினமும் அப்பா மாலை வீடு திரும்பும் போது குமார் வாயிலில் நிற்காவிட்டாலும் “குழந்தை எங்கே? இன்னம் வரலையா?” என்பார்.

அம்மாவிடம்..பிறகு அம்மாவிடமும் சிரித்து,சிரித்து பேசுவார்; காபியை சொட்டு, சொட்டாய் ருசித்தவாறு குடிப்பார்.

ஆனால் எப்போதாவது கோபமாய் இருக்கும்போது மட்டும் வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்துக்கூட பேச மாட்டார்.

கல்லுளிமங்கனாட்டம் எதையும் பேசாமல் இருப்பார்..அது கூட சில நிமிடங்கள் மட்டுமே..அம்மா காபி கொடுத்த பிறகு அவர் மூடு அறிந்து வெளியிலேயே வர மாட்டார்.

பிறகு….

அவராகவே “கெளரி,கெளரி ” என்று கூப்பிட்டு தன் கோபத்துக்கான காரணம் என்னவென சொல்வார்.

.அம்மாவும் சமாதானப்படுத்துவார்.

என்றைக்குமே அப்பாவின் கோபம் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததில்லை..

ஆனால் அன்று காரை விட்டு இறங்கியவர் நேராக தன் பெட்ரூமுக்குள் சென்று கதவை உட்பக்கம் தாளிட்டுக்கொண்டார்..இப்படியெல்லாம் செய்பவர் இல்லை அப்பா.. அம்மா பதறிப் போனார்..

“என்னங்க, என்னங்க, என்னாச்சுங்க் உங்களுக்கு?” என்றார்..

“பிளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ..என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு” என்றார் உள்ளிருந்தபடியே..மாலை 5 மணிக்கு தன் அறைக்குள் போனவர் 7 மணிவரை வெளியே வரவே இல்லை.அம்மா தவிப்பது தெரிந்தது..பிறகு அவராகவே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவர் “கெளரி,

சூடா ஒரு கப் காபியும் தலைவலி மாத்திரையும் எடுத்துக்கிட்டு வா ” என்றார்..

அப்பா கடின உழைப்பாளி..முன்கோபம் மட்டுமே அவரிடம் உள்ள கெட்ட குணம்.

அப்பா ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாடி பல அவமானங்களையெல்லாம் சந்தித்து படிப்படியாய் முன்னேறியவர் சின்ஸியராக உழைப்பவர்களை அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்.

நேரம் தவறாதவர்.பல விஷயங்களை அப்பாவிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அப்பாவே என் ஆதார்ச குரு . அப்பா அம்மா பாசமே உருவானவர்.

நேர்மை, பொய் சொல்லாதிருத்தல் இப்படி எல்லாமே பெற்றோரிடமிருந்தே தனக்கு வந்தது என்றும் தன் நண்பர்களிடம் குமார் பெருமையுடன் சொல்லியிருக்கிறான்..

கொஞ்ச நேரம் கழித்து அப்பா சகஜ நிலைக்கு வந்ததும் “ராத்திரிக்கு சூடா சாதமும் மிளகு ரசமும் வை. சுட்ட அப்பளம் போதும்” என்றவரைப் பார்த்து கெளரி சொன்னார். “நீங்க ராத்திரியில…” என்று சொல்ல ஆரம்பிக்கும் முன்பே

“ஆமாம் ..ராத்திரியில் இரண்டு சப்பாத்தி மட்டும்தான் எப்பவும் சாப்பிடுவேன். மதிய உணவு சாப்பிட்டிருந்தா..

ஆனா இன்னைக்கு …வேணாம் விடு..இப்ப்ப நினைச்சாலும் நெஞ்சு கொதிக்குது..என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்க..அதிகாரினா கொம்பா என்ன?” என்றவர்

“உனக்கு விஷயம் தெரியாதுல்ல..இப்பத்தான் நம்ம ஃபாக்டரி வளர்ந்துக்கிட்டு வருது.

நம்ம ஃபாக்டரி விஷயமா சில மேலதிகாரிகளை பார்த்து பேச வேண்டியிருந்தது..எனக்கு இன்னைக்கு மதியம் சரியா 12 மணிக்கு ஒரு பெரிய அதிகாரியை மீட் பண்ண அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தார்..

நானும் எல்லா வேலைகளையும் புறம் தள்ளி வச்சுட்டு 11.30க்கே அவரை சந்திக்க போயிருந்தேன்..அப்ப அவர் வேற ஒருத்தரோட பேசிக்கிட்டிருந்தார்..

அவருடைய நேர்முக உதவியாளரும் சரியா 12 மணிக்கு உங்களை அவர் காபினுக்கு கூப்பிடுவார்” என்றார்..

ஆனா, மணி 12, 1னு நேரம் ஒடிக்கிட்டே இருந்திச்சு.

சரியா 1.15க்கு வெளியே வந்தவர் அவர் பி.ஏ.நான் காத்துக்கிட்டிருந்ததை பத்தி சொல்ல, அவர் ஸாரி சொல்வார்னு எதிர்பார்த்தா, “அப்படியா, Let him wait..

நான் லன்ச் முடிச்சுட்டு வந்ததும் பார்க்கிறேன்னு சொல்லிட்டு விருட்டுனு என்னைக் கூட பார்க்காம போயிட்டார்..

இங்கே உங்களுக்கு லன்ச் புரவைட் பண்ணச்சொல்லட்டுமா? இல்லை வெளியில் போய் சாப்பிட்டுட்டு வந்துடறீங்களானு கூட..ஊஹூம்..

என்ன மனுஷங்கனு எனக்கு தோணினாலும் வெளியில் சொல்லிக்க முடியாம மனசுக்குள்ளவே வெதும்பிப் போனேன்..காலையிலும் இன்னைக்குனு பார்த்து பிரேக்ஃபாஸ்ட் கூட எடுத்துக்கலை..சரி போகட்டும்..நமக்கு காரியமாகணும்னு பொறுமையாய் இருந்தேன்..

லன்ச் இன்டர்வெல்ன்றது 1 மணியிலிருந்து 1.30 வரைனு அங்கே அறிவிப்பும் போட்டிருந்தது.

ஆனா அவர் 2 மணிக்குத்தான் வந்தார்.

வந்தவர் என்னை நிமிர்ந்துகூட பார்க்காமல் உள்ளே போனவர் என்னை வரவே சொல்லலை.

மணி 2.30 ஆகியும்..”நான் போய் லன்ச்முடிச்சுட்டு வந்துரட்டுமானு பி.ஏ.கிட்ட கேட்டப்ப

“ஐயயோ, சார் எப்ப வேணா உங்களை உள்ளே தன் காபினுக்கு கூப்பிடலாம்..அப்ப இல்லைனா அவருக்கு கோபம் வரும்..அடுத்த அப்பாய்ன்ட்மென்ட் 2.45க்கு ஒருத்தருக்கு இருக்கு..ஸோ பிளீஸ் வெய்ட்” என்றவரை பார்க்க பற்றிக் கொண்டு வந்தது..

ஒரு வழியாய் 4 மணி சுமாருக்குத்தான் எனக்கு அப்பாய்ன்மென்ட் கிடைச்சது..பசி வேற வயித்தை கிள்ளுது..தலைவலி வேற” என்றவரை பார்த்து அவரது மகன் குமார் கேட்டானே

ஒரு கேள்வி..”அப்பா நான் சொல்றதை கேட்டு நீங்க என்னை கோபிக்கக் கூடாது..அந்த அதிகாரிக்கு என்ன நிர்பந்தமோ என்னவோ உங்களை காக்க வச்சுட்டார் பசியோட..

இது சரினு நான் வாதாட வரலை..ஆனா, நீங்க..” என்றவன் “வேணாமே அப்பா இதுக்கு மேலே” என்ற போது

“நீ என்னடா சொல்ல வரே? எதுவாயிருந்தாலும் ஒப்பனா எங்கிட்ட சொல்லலாம்..நானும் என்னை திருத்திப்பேன்ல!” என்றவரை பார்த்து

“அப்பா நம்ம டிரைவர் அங்கிள் நமக்காக ராப்பகல்னு பார்க்காம உழைக்கிறார்ல நேரம் காலம் பார்க்காம..பசி, தூக்கம் மறந்து.. என்னைக்காவது ஒருநாள் நீங்க வெளியில் போறப்ப அது லன்ச் டைமா இருந்தா நீங்க என்ன பண்றீங்க? நான் லன்ச்முடிச்சுட்டு வந்துடறேம்பா.. மாலை வேளையாய், இரவு டின்னர் சமயமாயிருந்தாலும் கூட அந்த அங்கிள் சாப்பிட்டாரானு ஒரு வார்த்தை நீங்க கேட்டதுண்டா?

கேட்டா அவருக்குத் தான் சம்பளம் கொடுக்க்றம்லனு சொல்வீங்க..இருந்தாலும் ஒரு மனிதாபிமான அடிப்படையில நீங்க சாப்பிடப் போகும்போதெல்லாம் அவரை ஏன் உங்ககூடவே அழைச்சிக்கிட்டு போய் சாப்பிடச் சொல்லக்கூடாதுப்பா.

அட்லீஸ்ட் ஒரு டீ, ஸ்னாக்ஸாவது சாப்பிடுப்பானு பணம் கொடுக்கக் கூடாது”? என்ற போதுதான் தன் தவறு புரிந்தது..

“என் கண்களை திறந்து விட்டேப்பா. நீ? தப்புத்தான் பண்ணியிருக்கேன் . நான் இப்ப நான் வீட்டுக்கு வந்து 2 மணி நேரமாச்சு..

டிரைவர் வாசல்ல கார் பக்கத்தில் நின்னுக்கிட்டிருப்பார்.

வா ..அவராண்ட போய் “சாப்பிட்டியானு கேட்டுட்டு உள்ளாற கூட்டி வந்து அவரை சாப்பிடச் சொல்லலாம்.

எல்லாமே தனக்குனு வந்தாத்தானே தெரியுது.

அவர் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பது தெரிந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *