தந்தையர் தினத்தைப் பற்றி பக்கம் பக்கமாகக் கவிதை எழுதி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டான் விசாகன்.
அவன் கவிதைகளைப் படித்து மெச்சி உச்சி முகர்ந்து பாராட்டும் நற்சான்றிதழ்களும் வழங்கிக் கொண்டிருந்தார்கள் சமூக ஊடகங்களில் இருப்பவர்கள்.
சிலர் விசாகனுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அவன் கவிதையைப் பாராட்டி மகிழ்ந்தார்கள் .
விசாகன் உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் வைரத்தால் தொடுத்த வைரமாலை மாதிரி இருக்கு. இந்தக் கவிதைய நீங்க எல்லா மொழிகளையும் டிரான்ஸ்லேட் பண்ணா நிச்சயமா அத்தனை விருதுகளும் உங்களுக்கு வந்து சேரும் . நீங்க எழுதுன கவிதைகளிலே இதுதான் தரமான கவிதைன்னு நினைக்கிறேன். அதுக்காக மத்ததெல்லாம் நல்லா இல்லைன்னு சொல்லல. இது இன்னும் சிறப்பு என்று எத்தனையோ நண்பர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அறிந்தவர்கள் அறியாதவர்கள் என்று சமூக வலைதளங்கள் மூலமாக விசாகனுக்குப் பாராட்டை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
அன்று விசாகனுக்கு இருப்புக் கொள்ளவில்லை . 24 மணி நேரமும் செல்போனைப் பார்த்தபடி இருந்தான். அவன் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை சந்தோசம் தலைமுட்டியது.
விசாகனின் மனைவி கூட அவன் சந்தோசத்திற்கு தடை விதிக்கவில்லை.
உண்மை தாங்க உங்க தந்தையர் தினக் கவிதை ரொம்ப நல்லாத் தான் இருக்குது. .எனக்கே இத படிச்சிட்டு ஆச்சரியமா இருந்தது என்று மனைவியும் கணவனைப் பாராட்டினாள்.
அன்று முழுவதும் விசாகனின் கவிதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது சமூக வலைதளங்கள் முழுவதும் .
ஒரு வயதான பெரியவர் விசாகனின் கவிதையைப் படித்து கண்ணீர் மல்க பேசினார் .
தம்பி உங்க கவிதையைப் படிச்சிட்டு நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன் .
அப்பான்னா இப்படித்தான் இருக்கணும் . உங்க அப்பா ரொம்ப கொடுத்து வெச்சவர்ன்னு நினைக்கிறேன். உன்ன மாதிரி ஒரு மகன் எனக்கு இருந்திருந்தா நான் ரொம்ப சந்தோசப்பட்டு இருப்பேன் . நீ நல்ல பையன் தம்பி நீ நல்லா இருக்கணும் . உங்க அப்பா எங்க இருக்கார்? உங்க அப்பா பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? என்று கேட்டார் அந்தப் பெரியவர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் கொஞ்சம் திணறிய விசாகன்
எங்க அப்பா பேரு பால்ராஜ் இப்போ என் கூட இல்லை என்று கொஞ்சம் இடைவெளி விட்டுச் சொன்னான்.
ஏன் என்று எதிர் கேள்வி கேட்டார் அந்தப் பெரியவர்.
இல்ல சார், எங்க அப்பாவ என் மனைவி சரியா பாத்துக்கல எங்க அப்பாவால என் மனைவிக்கும் எனக்கு சண்டை வந்துகிட்டே இருந்தது. எங்கம்மா ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. நான் என் மனைவி என் குழந்தைங்க, எங்க அப்பா மட்டும்தான் வீட்ல இருந்தோம். எங்க கூட அப்பாவால் ஒத்துப் போக முடியல. அதனால அவர ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துட்டேன் என்றான் விசாகன்.
அப்படியா அதான் உங்க அப்பா உன்னப் பத்தி என்கிட்ட சொன்னாரு இந்த கவிதையும் அவருதான் எனக்கு படிச்சு காட்டுனாரு . உங்க அப்பா இருக்கிற ஹாேம் ல தான் நானும் இருக்கேன்.
ஏம்பா ஒரு சில புள்ளைங்க அப்பா அம்மாவை தவிக்க விட்டுட்டு சமூக வலைதளங்கள்ல கவிதை மட்டும் எழுதுறீங்க . கவிதை, கதை என்று அவங்கள உச்சி மோந்து பாராட்டுறது. புகழ்ந்து தள்ளுறது எல்லாம் வெறும் வார்த்தைக்கு மட்டும்தானா? வாழ்க்கைக்கு இல்லையா? தம்பி. நீங்க எழுதியிருக்கிற கவிதைக்கும் உங்க அப்பா கிட்ட நீங்க நடந்துக்கிட்டதுக்கும் சம்பந்தமே இல்ல . முதல்ல சமூக வலைதளங்களில் இருக்கிற உங்க கவிதை மொத்தத்தையும் அழிச்சிடுங்க .ஏன்னா உங்கள பத்தி சொல்லி உங்க அப்பா இங்க கண்ணீர் விட்டுட்டு இருக்காரு. அதற்கு எதிர்மாறா நீங்க கவிதை எழுதிட்டு இருக்கீங்க. இது தப்பு. உங்களுடைய நடவடிக்கை எப்படி இருக்குதாே அப்படித்தான் உங்க வாழ்க்கை இருக்கணும். அது உங்க கிட்ட இல்ல. அப்படி நீங்க உங்க நடவடிக்கையை மாத்திக்கிட்டீங்கன்னா, இந்த ஹோம்ல இருந்து உங்க அப்பாவ கூட்டிட்டு போங்க. உங்க வீட்ல வச்சுக்கங்க .நல்ல முறையில பாருங்க. அதுக்கப்புறம் நல்லா கவிதை எழுதுங்க. அந்தக் கவிதைக்கு மத்தவங்களிடம் இருந்து வர்ற பாராட்ட உண்மையா வாங்கிக்கோங்க. அப்பத்தான் உங்க கவிதை ஜெயிக்கும் என்று விசாகன் தலையில் ஆணி அடித்தது போல சொன்னார் அந்தப் பெரியவர் .
இதைக் கேட்ட விசாகனுக்கு கண்கள் ரெண்டும் நிலை குத்தி வெளியே பிதுங்குவது போலத் தெரிந்தது.