செய்திகள்

தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி 7 பேர் பரிதாப பலி

ஐதராபாத், ஏப். 12–

ஆந்திராவில் நேற்று இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் பகுதியில் கோவை – சில்சார் வாராந்திர அதிவிரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. நடுவழியில் பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து அதிலிருந்து இறங்கி, ரயில் தண்டவாளங்களை கடந்து சென்று கொண்டிருந்தனர்.

7 பேர் பலி

அப்போது எதிர் திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த மும்பை கோனார்க் எக்ஸ்பிரஸ், ரயில் தண்டவாளங்களை கடக்க முயன்றவர்கள் மீது அதிவேகமாக மோதியது. இதில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதியில் இருப்பவர்கள், ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தி, நடுவழியில் இறங்கி, இதுபோல் தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கம் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் வருத்தம் தெரிவித்துள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.