சிறுகதை

தண்டச்சோறு | ஆவடி ரமேஷ்குமார்

“உங்கப்பாவுக்கு ஒத்தாசையா மளிகை கடையையும் பார்த்துக்க மாட்டேங்கிறே. உங்கப்பா சொல்ற பனியன் கம்பெனி வேலைக்கும் போகமாட்டேங்கிறே… சரி என் கூட சென்னைக்காவது வாயேன்டா!”

பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தான் கிருஷ்ணன்.

” பதில் சொல்றானானு பாரு. ஊர் சுத்தறது, பொண்ணுக பின்னாடி அலையறது… இதுகளை தவிர இந்த கழுதைக்கு வேறென்ன தெரியும்? பின்ன நான் இவனை முட்டாளு, தண்டச்சோறு, மக்கு, தடிமாடு, நாலு காசு சம்பாதிக்க துப்பில்லாதவன்னு திட்டாம வேற என்ன சிவா பண்ணுவேன்?”

சிவாவை பார்த்துப் புலம்பினார் அவனின் சித்தப்பா வாசுதேவன்.

” ஏன் சித்தப்பா அவசரப்படறீங்க. அவன் யோசிச்சுப் பேச டைம் கொடுக்க வேண்டாமா?”

“இதுல யோசிக்க என்ன இருக்கு? இந்த தண்டச் சோறு எப்படியோ எங்கேயோ போய் தொலையட்டும். என் மூஞ்சியிலமுழிக்கக் கூடாது.

அவ்வளவுதான்!”

கத்திய வாசுதேவன் கோபமாய் வீட்டைவிட்டு வெளியேற, ” சரி சிவாண்ணா… நான் உங்க கூட சென்னைக்கே வரேன்” என்றான் கிருஷ்ணன்.

சென்னை.

போரூரில் சிவாவுக்கு சொந்தமான டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலைக்கு சேர்ந்தான் கிருஷ்ணன்.

ஆறு மாதம் சென்றிருக்கும்.

சிவா தன் சித்தப்பாவை போனில் அழைத்தான்.

” என்ன சிவா”

” நீங்களும் சித்தியும் உடனே என் வீட்டுக்கு புறப்பட்டு வாங்க சித்தப்பா”

” ஏன், எதுக்கு சிவா?”

” கிருஷ்ணனுக்கு கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கு”

” என்னப்பா சொல்ற… அவனுக்கு எதுக்கு திடீர்னு கல்யாணம் பண்ணனும்கிறே… கடையில் அடங்கி ஒடுங்கி உட்காராம பொண்ணுகள் பின்னாடி சுத்திட்டிருக்கானா அந்த தண்டச்சோறு?”

” நேர்ல வாங்க சித்தப்பா முழுசா விவரமா சொல்றேன்”

வாசுதேவன் தன் மனைவியை கூட்டிக்கொண்டு போரூர் வந்து சேர்ந்தார்.

வந்தவர்களுக்கு சிவா செய்தியை சொல்ல அதிர்ந்தனர்.

சிவா வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருடைய ‘ மாற்றுத்திறனாளி’ மகள் கீர்த்தனாவிடம் தினமும் இனிக்க இனிக்கப் பேசி, காதல் வலை வீசி மயங்க வைத்து அவளை கல்யாணம் செய்து கொள்ள அவளிடம் சம்மதமும் வாங்கிவிட்டான் கிருஷ்ணன்.

நீண்ட காலமாக மாப்பிள்ளை அமையாத காரணத்தினால் வீட்டு உரிமையாளரும் கிருஷ்ணன் – கீர்த்தனா காதலை அங்கீகரித்து விட்டார்.

ஒரே மகள்; பல கோடி சொத்து!

சொத்தில் பாதியை கிருஷ்ணன் பெயருக்கு எழுதி வைப்பதாக வாய்மொழியாக சிவாவிடம் உறுதியும் அளித்துவிட்டார்.

இந்த விஷயங்களை தன் சித்தப்பாவிடம் விளக்கிய சிவா, ” அவனை தண்டச்சோறு தண்டச்சோறுன்னு திட்டினதுமில்லாம சம்பாதிக்க துப்பில்லாதவன்னு சதா வசை பாடிட்டிருந்தீங்களே சித்தப்பா.. இப்ப அவனை இனி என்ன சொல்லி திட்டப்போறீங்க?” என்று கேட்டான்.

சிவாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் சித்தப்பா வாசுதேவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *