தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை, ஜூன்.15-
சுப்ரீம் கோர்ட் தடை விதித்து இருந்தும் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கார்களை சாலைகளில் ஓட இன்னும் அனுமதிப்பது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தனியார் வாகனங்களில் அரசு, போலீஸ், ஊடகம், வக்கீல், டாக்டர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர போலீசார் அறிவித்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வாகனங்களில் டாக்டர் ஸ்டிக்கரை பயன்படுத்த டாக்டர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்கியது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
பின்னர் நீதிபதி கூறியதாவது:-
கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தாலும், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்கள் சாலைகளில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றன. மேலும் கார்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு செல்வதையும் காண முடிகிறது. இவைகளுக்கு எதிராக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று தனி வழி இருந்தும், அந்த பாதை முறைப்படுத்தாமல் உள்ளது.
நகரச் சாலைகளில் மோட்டார் சைக்கிளுக்கு தனி வழி இல்லை. முன்பு போல மோட்டார் சைக்கிள்களுக்கு என்று தனி வழி ஏற்படுத்த வேண்டும். சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. அதனால், சாலை விபத்துக்களை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல், ‘‘கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். கார்களில் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்தால், அதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கின்றனர்” என்றார்.