நாடும் நடப்பும்

தடுமாறும் பொருளாதாரம்!


ஆர். முத்துக்குமார்


பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கப் போகிறது, உத்திரப்பிரதேசத்திலும், மணிப்பூரிலும் பாரதீய ஜனதா வெற்றி மற்றும் கோவா, உத்ரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க இருப்பதாக வாக்குப் பதிவுக்குப் பிந்தைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் திட்டவட்டமாக கூறுவதாக தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகப் பார்க்க முடிகிறது.

ஆனால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும், நமது ரூபாயின் மதிப்பு குறைவும் பல்வேறு புதுப்புது சிக்கல்களுக்கு நாடு தயாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கச்சா எண்ணெய் விலை காரணமாக பெட்ரோல், டீசல்களின் விலை ஏற்றம் காணும், ரூபாய் மதிப்பு குறைந்து இருப்பதால் பண வீக்கமும் அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கியின் முன் இருக்கும் அடுத்த தலைவலி ரூபாய் மதிப்பு குறைந்து உணவு தானியங்களின் விலை உயர்வும் ஏழை நடுத்தர வர்க்கத்திற்கு புது சுமையாக மாறி வரும் சூழ்நிலையில் வங்கிக் கடன் வட்டி விகிதத்தை ஏற்றினால் தாங்குவார்களா?

ஒரு வேலை தற்போதைய விலையே தொடர்ந்தால் பண வீக்கத்தால் வங்கிகளின் சேவைகள் லாபகரமாக இன்றி, நஷ்டத்தில் இயங்கினால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பை சந்திக்குமே?

இந்நிலையில் பங்குச் சந்தை நேற்று 2% வீழ்ச்சியையும், இன்று மதியம் வரை 1% வீழ்ச்சியையும் கண்டு, மும்பை பங்குச் சந்தை குறியீடு 52,430 புள்ளியாக குறைந்து விட்டது.

உக்ரைன் போர் துவக்க அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்த நாளிலேயே பங்குச் சந்தை வீழ்ச்சியைக் காண துவங்கியது.

கிட்டத்தட்ட 59,000 புள்ளிகளில் இருந்து தற்போது 7000 புள்ளிகள் வீழ்ந்துள்ளது. இதே நிலை உலக வர்த்தகத்தில் அடுத்த சில வாரங்களுக்கு மாற்றம் ஏற்பட வழியின்றி இருப்பதால் பொருளாதார வீழ்ச்சி தொடரத்தான் செய்யும்.

கையிருப்பு பங்குகளை பெரிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் விற்று விட்டு நிலையான முதலீடாக கண்களில் தென்படும் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

அதன் காரணமாக சென்னையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டி விட்டது.

கடந்த 2020 ஆகஸ்ட்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. கொரோனா தொற்று குறைந்து, பங்குச் சந்தையில் முதலீடுகள் அதிகரித்ததால் தங்கத்தின் விலையும் படிப்படியாக குறையத் தொடங்கியது.

இதற்கிடையே ரஷ்யா – உக்ரைன் போர் உச்சத்தை அடைந்துள்ளதால் மீண்டும் பங்குச் சந்தை சரிவை சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியதால் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று கிராமுக்கு ரூ.101 உயர்ந்து ரூ.5071–க்கும், பவுனுக்கு ரூ.808 அதிகரித்து ரூ.40,568–க்கும் விற்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published.