நாடும் நடப்பும்

தடுப்பூசி வழங்குவதில் நல்ல முன்உதாரணம் அமெரிக்கா

நமது சொந்த பந்தங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய பிரதேசங்களில் இருப்பவர்களுடன் பேசும்போது எழும் ஓர் முக்கியமான அம்சம் எங்கள் ஊரில் முகக்கவசம் தேவையில்லை என்பதே!

பெரும் பாதிப்பிற்குள்ளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தப் புது திருப்பம் வரக் காரணங்களில் ஒன்று கோவிட் தடுப்பூசியாகும்.

அமெரிக்காவில் ஜனத்தொகை 33 கோடி பேர். அவர்களில் இதுவரை 20 கோடி பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 14 கோடி பேருக்கு 2 வது பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு விட்டது.

ஆக 40% ஜனத்தொகை தடுப்பூசியை பெற்று விட்டது, மேலும் 20% பேர் அடுத்த 30 நாட்களில் பெற்றுவிட இருக்கும் நிலையில் தான் அமெரிக்க அதிபர் பிடன் இனி முகக்கவச உத்தரவில் தளர்வுகளை அறிவித்துள்ளார்.

அந்நாட்டில் பைசர், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆஸ்ட்ரா ஜனிகா அது நம் நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்ஸ் மற்றும் சனோபி ஜிஎஸ்கே ஆகிய தடுப்பு மருந்துகள் அங்கீகாரம் பெற்றுள்ளது.

நம் நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் மருந்துகள் மட்டுமே ஒப்புதல் பெற்றுள்ளது.

அரசியலை தாண்டி

அமெரிக்கர்கள் அதிகம் பெற்றது மாடர்னா தடுப்பூசியாகும். நவம்பர் 2020லேயே அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் தோற்ற பிறகு காபந்து ஜனாதிபதியாக இருந்த நிலையில் அவரது ஒப்புதல் சரியே என்று வெற்றிபெற்ற பிடன் தட்சி ஒப்புதல் தந்தது நினைவிருக்கலாம்.

மக்கள் நலன் காக்க அரசியல் காரணங்களை கடந்து அன்றைய சூழ்நிலையில் எடுக்கப்பட்ட அற்புதமான முடிவு. அதன் பயனைத்தான் இன்று அமெரிக்கா அனுபவிக்கிறது.

அன்றே டிரம்ப் அரசு மாடர்னா, கோவிஷீல்டு, ஜான்சன் & ஜான்சன் மற்றும் பைசர் நிறுவனங்களிடம் முன்பணம் செலுத்தி மொத்தம் 60 கோடி தடுப்பூசிகளை பெற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஏன் எல்லா தயாரிப்புகளையும் வாங்க வேண்டும்? இன்று பிரதமர் மோடி சந்திக்கும் நிதர்சன சிக்கலை முன்பே அவர்கள் எதிர்பார்த்து அதிகப்படி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்கள்.

மோடி அரசு கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு மட்டுமே ஒப்புதல் தந்து அதை ஜனவரி மாதத்தில் உபயோகிக்க ஆரம்பித்தது.

ஆனால் அமெரிக்காவோ 10 கோடி கோவிஷீல்டு தயாரிப்புக்கு நவம்பர் மாதமே முன்பணமாக கொடுத்து விட்டது. ஆகையால் அந்த முன்பணம் கொண்டே அதிமுக்கிய ஆய்வுகளை அந்நிறுவனத்தால் துல்லியமாகச் செய்ய முடிந்தது.

தட்டுப்பாடு கிடையாது

அமெரிக்க நாட்டு தயாரிப்பான மாடர்னா அந்நாட்டு சட்டத்திட்டங்களின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் வீரியத்தை அறிவித்தார்கள். அதனால் மாடர்னா தான் அமெரிக்காவில் பெருவாரியாக உபயோகிக்கப்பட்டு வருகிறது.

அது சரி, 10 கோடி கோவிஷீல்டு வாங்க தந்த முன்பணத்தை திருப்பி கேட்டு விடுவார்களா? அதுவும் கிடையாது! அதை மிக பாதுகாப்பான உறைபனி குளிர் நிலையில் பத்திரமாக சேமித்து வைத்திருக்கிறார்கள்.

மாடர்னா, பைசர் முதலிய தயாரிப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் குறுகிய காலத்திற்கு மட்டுமே மாற்றாக கோவிஷீல்டு உபயோகிக்கப்படுகிறது.

ஆகவே எந்த மாநிலத்திலும் அங்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைவரையும் தடுப்பூசியை பெற வைத்தாக வேண்டும் என்பதற்காக பல புதுப்புது யுக்திகள் அமெரிக்காவில் கையாளப்படுகிறது.

* சூப்பர் மார்க்கெட்டில் தடுப்பூசி பெற்றவருக்கு 10 டாலர் இலவசம்.

* மதுபானக் கடைகளில் பில் தொகையிலும் விசேஷமாக 10% தள்ளுபடி

* திரையரங்குகளில், நாடக, இசை நிகழ்வுகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் தடுப்பூசி பெற்றவருக்கே முன்னுரிமை, விலையும் குறைவு!

* தடுப்பூசியை பெறும்போது அவரது பெயர் லாட்டரி சீட்டு குலுக்களில் சேர்க்கப்படுவதால் முதல் பரிசாக டாலர் 10 லட்சம் வெல்லவும் வாய்ப்பு

இப்படியாக அந்த அரை சி.சி. தடுப்பூசியை போட்டுக் கொள்ள ‘இனிப்பை தடவி கசப்பு மாத்திரையை’ தரும் யுக்தியை பின்பற்றி அதில் வெற்றி பெற்றும் வருகிறார்கள்.

தடுப்பூசி அரசியல்

30 கோடி பேருக்கு தடுப்பூசியை உபயோகித்தாலும் மீதி 30 கோடி ஊசிகளை என்ன செய்வது? அதைத்தான் அமெரிக்க கெடுபிடி அரசியல் ஆதாயம் பெற வழிவகுக்கிறது.

ஒலிம்பிக்ஸ் நடத்த ஜப்பானுக்கு குறைந்தது 2 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும்.

உபயோகப்படாமல் இருக்கும் 9 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியாவிற்கே திரும்ப அனுப்பினால் மோடி அரசால் நிம்மதி பெருமூச்சு விட முடியும்!

அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருக்கும் பல்வேறு சிறுசிறு நாடுகளுக்கு கொடுத்து நல்ல பெயர் சம்பாதிக்க மீதி 15 கோடிக்கு மேல் உள்ள தடுப்பூசிகள் உபயோகமாகும்.

இது டிஜிட்டல் யுகம், பிரதமர் மோடியின் கனவு டிஜிட்டல் இந்தியா! Big Data, அதாவது பெரும் தடவு கணினி சமாச்சாரத்தை கையாளும் நிபுணர்களிடம் ஆலோசித்து தடுப்பூசி வழங்குவதை செயல்படுத்தாது. தன்னிச்சையாக எடுத்த முடிவுகளால் நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் 5% பேர் வரை கூட தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 25% பேராவது அடுத்த 100 நாட்களில் தடுப்பூசியை பெற வழி கண்டால் தான் நம் நாட்டிலும் கொரோனா பரவல் தடுப்பு ஓர் அளவு கட்டுப்பாட்டிற்குள் வரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *