சென்னை, மே 4–
சென்னையில் வீடு வீடாக தடுப்பூசி போட ‘சிலிப்’ வினியோகம் செய்ய மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்னும் 1.5 கோடி பேர் தடுப்பூசி போட தகுதி இருந்தும் போடாமல் இருந்து வருகின்றனர். அவர்களை கண்டறிந்து மாவட்டம் வாரியாக தடுப்பூசி போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும பொது சுகாதாரத்துறை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வருகிற 8-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் முகாம்களை நடத்தாமல் காலையில் இருந்து மதியம் வரை ஒரு பகுதியிலும், பிற்பகல் முதல் மாலை வரை மற்றொரு பகுதியிலும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 2வது தவணை தடுப்பூசி போடாமல் 9 லட்சம் பேர் உள்ளனர். முதல் தவணை 75 ஆயிரம் பேர் போடாமல் உள்ளனர்.
வீடு வீடாக சிலிப்
2-வது தவணை போடக்கூடிய அவகாசம் முடிந்த நிலையில் உள்ளவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு மண்டலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடாமல் இருந்து வரும் மக்களுக்கு வீடு வீடாக சிலிப் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வார்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அவர்களின் பெயர் மற்றும் தடுப்பூசி போடக்கூடிய மையம் போன்றவற்றை குறிப்பிட்டு வருகிற 8-ந்தேதி சிறப்பு முகாமில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முகாம் நடைபெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால் அதற்குள்ளாக ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.