செய்திகள்

தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூன்.2-

தமிழகத்துக்கு 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் வந்துள்ளதால் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கருப்பு பூஞ்சை நோய்க்கான பரிசோதனை செய்து, சிகிச்சை பெற சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கருப்பு பூஞ்சை நோய் சம்பந்தமாக தொடக்க நிலையிலேயே சிறிய அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு, இங்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேகமாக புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதில் கண் மருத்துவர், காது, மூக்கு தொண்டை உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு, இங்கேயே தங்கி சிகிச்சை பெற 120 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருப்பு பூஞ்சை தொற்று குறித்து ஏற்கனவே 13 மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

518 பேர் பாதிப்பு

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கூட ஏற்கனவே கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டு தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், ஸ்டீராய்டு போன்ற எதிர்ப்பாற்றல் மருந்து சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு வருகிறது எனக் கூறப்படுகிறது.

இந்த நோய் குணமாகக்கூடியது. பலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 17 பேர் கருப்பு பூஞ்சைக்கு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

92 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்

இதையடுத்து சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தடுப்பூசி சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்துக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளது. அதோடு 75 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்துள்ளது. அந்தவகையில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் வந்துள்ளது. வந்திருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே போடப்படும்.

இதுவரை 1 கோடியே 1 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது. 90 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கையிருப்பில் 6.5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளது. தற்போது வந்துள்ள தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்தனுப்பும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் நாளை (இன்று) முதல் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும், தினசரி தடுப்பூசி போடும் பணி நடைபெறம்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், அங்கு அதிகளவில் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். இந்த தடுப்பூசிகள் இன்னும் 3 நாளைக்கு போதுமானதாக இருக்கும். மேலும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 42 லட்சம் தடுப்பூசிகள் இந்த மாதத்தில் தொடர்ந்து தமிழகத்துக்கு வரும். அதில் 25 லட்சம் தடுப்பூசிகள் மத்திய தொகுப்பில் இருந்தும், மீதமுள்ள தடுப்பூசிகள் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பணம் கொடுத்தும் வாங்கப்படுவதாகும்.

ஏற்கனவே 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. இன்னும் 13 லட்சம் அளவில் தடுப்பூசிகள் வர இருக்கிறது. நாங்கள் பொதுமக்களை தடுப்பூசி போட சொல்லி கட்டாயப்படுத்திய காலம் மாறி, பொதுமக்கள் தங்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என அரசை கட்டாயப்படுத்துகின்றனர். அந்தளவுக்கு பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். ஆக்சிஜன் தேவை 500 டன் இருந்தாலே போதும். ஆனால் தினசரி கையிருப்பு 650 டன் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்பட அதிகாரிகள் இருந்தனர்.

அரசு மருத்துவமனையில் படுக்கை தட்டுபாடு இல்லை

இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரனிடம் கேட்டறிந்தார். மருத்துவர்கள் வி.டி.அரசு, நர்மதா, செல்வம், ரவிக்குமார், ரத்தினவேல்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 680 படுக்கைகள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 165 படுக்கைகள் உள்ளன. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு இல்லை. இந்த மாவட்டத்தில் நாளுக்குநாள் தொற்று குறைந்து வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *