செய்திகள்

தடுப்பூசி திருவிழா முதல்நாள்: 27 லட்சம் பேருக்கு தடுப்பூசி

டெல்லி, ஏப். 12–

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளான நேற்று, 27 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று தடுப்பூசி. தடுப்பூசி போடுவதை மக்களிடையே ஊக்குவிக்கும் வகையில், ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14 வரை இந்தியா முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

27 லட்சம் பேருக்கு தடுப்பூசி

அதன்படி, நான்கு நாள் தடுப்பூசி திருவிழா நேற்று தொடங்கியது. முதல் நாளான ஞாயிற்றுக் கிழமையில், அதிகமான மக்கள் ஆர்வமுடன் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை கூறுகையில், தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில் இரவு 8 மணி வரை 27 லட்சத்து 69 ஆயிரத்து 888 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வழக்கமாக 45,000 கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி மையங்களுக்கு பதிலாக 63 ஆயிரத்து 800 ஆக அதிகரிக்கப்பட்டது.

சராசரியாக, ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை 16 லட்சம் வரை இருப்பது வழக்கம். ஆனால் தடுப்பூசி திருவிழாவின் முதல் நாளில், 27 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 25 லட்சத்து 47 ஆயிரத்து 691 பேர் தடுப்பூசியின் முதல் டோஸையும், 2 லட்சத்து 22 ஆயிரத்து 197 பேர் இரண்டாவது டோஸையும் எடுத்துக் கொண்டனர்.

முதல் டோஸை எடுத்துக் கொண்ட 16 லட்சத்து 73,140 பேரும், இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட 35 ஆயிரத்து 127 பேரும் 45-60 வயதை உடையவர்கள். அதுபோன்று, முதல் டோஸை பெற்றுக்கொண்ட 8 லட்சத்து 25 ஆயித்து 101 பேரும், இரண்டாவது டோஸை பெற்றுக் கொண்ட 1 லட்சத்து 37 ஆயித்து 314 பேரும் 60 வயதை தாண்டியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *